Monday, January 14, 2013


அதிரடிப்படை ஆபரேஷன் படுதோல்வி !
14 January, 2013 by admin


சோமாலியாவில் பிரான்ஸ் நாட்டு அதிரடிப் படையினர் நடத்திய பணயக் கைதி மீட்பு தாக்குதல் ஒன்று தோல்வியில் முடிந்துள்ளது. பணயக்கைதி கொல்லப்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட அதிரடிப்படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்றொரு வீரரை காணவில்லை. அதேநேரத்தில், இந்த அதிரடி தீவிரவாத அமைப்பினர் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-ஸபாப் தீவிரவாத இயக்கத்தினரால் 2009-ம் ஆண்டு சோமாலியா தலைநகர் மொகதிஷுவிலிருந்து டெனிக்ஸ் அலெக்ஸ் என்ற பிரஞ்சுக்காரர் கடத்தப்பட்டிருந்தார். இவர் பிரான்ஸ் நாட்டு உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்றனர் தீவிரவாதிகள். இவரை விடுவிக்க பிரான்ஸ் சில முயற்சிகள் செய்தும், எதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில், மாலி நாட்டில் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக யுத்தம் புரிய பிரஞ்சு ராணுவம் அங்கு போய் இறங்கியுள்ளது. அங்கு மோதலில் ஈடுபட ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களில், பிரஞ்சு விசேட கமாண்டோ படையினர் சோமாலியாவின் தென்பகுதிக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

அது, இந்த அதிரடி நடவடிக்கைக்காகதான் !

அல்-ஸபாப் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிரஞ்சு பணயக் கைதியை விடுவிக்க முயற்சி செய்தபோது தீவிரவாதிகளால் கடுமையான பதில் தாக்குதல் வந்தது என்றும், பணயக் கைதி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் பிரஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் அல்-ஸபாப் தீவிரவாத இயக்கம் வேறு ஒரு கதை கூறுகிறது. தாம் பிடித்து வைத்திருக்கும் பிரஞ்சு உளவாளி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்றும், அவரை என்ன செய்யப் போகிறோம் என்று இன்னும் சிறிது நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அல்-ஸபாப் தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார்.

No comments: