Thursday, November 1, 2012


கருவுறுதலும் கருவின் வளர்ச்சியும் - Embryo and Fetus - விரிவான விளக்கங்களுடன் - வீடியோக்கள் இணைப்பு


E-mailPrintPDF
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் ஓர் அற்புதமான அனுபவம். தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும் போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான மாற்றங்களின் காரணமாகக் கருப்பை உள்ளிருக்கும் சிசுவின் வளர்ச்சியுடன் இணைந்த புதிய சூழ்நிலைக்கு அப்பெண் தன்னைத் தானே ஆயத்தாமாக்கிக் கொள்வது தாய் சேய் இருவரின் உடல்நலனுக்கும் மிக இன்றியமையாததாகும்.
கருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம்.
ஒரு பெண் கருவுறும்போது, அவள் உடலில் ஹார்மோன்கள் பல சாதகமான விளைவுகளை உண்டாக்கினாலும் அவளது உடலியல் தேவைகளும் அதிகமாகின்றன. கருப்பையில் வளரும் சிசுவின் தேவைகள் அதிகரிப்பதால், இதயம், கல்லீரல் போன்ற இன்னும் பல முக்கிய உறுப்புகளின் வேலைப் பளு அதிகரிக்கிறது.
தவறான போஷாக்கு, நல்வழித் தேவைகளைப் புறக்கணித்தல், மிகையான உளைச்சல், பாதகமான சூழ்நிலைகள் ஆகியவற்றினால் உடலின் சாதாரணமான பணிகள் பாதிக்கப்பட்டு, கருவளர்ச்சியில் சிக்கல்கள் தோன்றலாம்.
பெண்ணின் கரு முட்டை:
ஒரு பெண்ணானவள், குழந்தையாகப் பிறக்கும்பொழுதே ஒரு மில்லியன் முட்டைகளை உருவாக்கும் கரு அணுக்களை உடையதான இரு சூலகங்களுடன் பிறக்கின்றது. கருவானது ஒரு பருவமடைந்த பெண்ணில் ஒரு பாதாம் பருப்பு விதையினைப் (almond-sized) போன்ற இரு சூலகங்களில் அல்லது கருவறைகளில் உற்பத்தியாகின்றன. இந்த சூலகங்கள் இரண்டும் கர்ப்பப்பைக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளது
ஒரு பெண் பருவமடைந்தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் சுமார் 20 கரு முட்டைகள் தயாராகி  வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன. ஆனால் அவற்றுள் பெரும்பாலும் ஒன்றோ அல்லது சிலவே மாத்திரம் முதிர்ச்சி அடைந்து வெளிவருகின்றன. வெளிவரும் முட்டைகள் பலோப்பியா குளாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லுகின்றது. கருக்கட்டல் பலோப்பியா குளாயினுள்ளே நடைபெறுகின்றது.
இந்தக் கருமுட்டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப்பைக் குழாயினால் (பலோபியன் குளாயினால்) உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பையினுள்ளே நுழைகிறது. 
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அந்த கருமுட்டையோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த கருமுட்டை சினைப்பட்டு தொடர்ந்து உயிர்வாழ முடியும். கரு முட்டையை கருவாக்கும் (சினைப்படுத்தும்) ஆணின் விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது. அவை கழிவாக மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது. 
பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த விந்தணு (உயிரணு) இணையும்போதுதான் புதிய சிசுவுக்கான கரு உருவாகும். இதனை கருக்கட்டல் என அழைக்கப்படும். கருக்கட்டல் நிகழாதுவிடின் பெண்ணில் உருவாகிய கருமுட்டை அழிந்துவிடும். அதுவே மாதவிடாய் என கழிவாக வெளிவருகின்றது.

ஆணின் விந்தணுக்கள்:
உடலுறவின்போது ஆண் குறியில் இருந்து ஒருமுறை வெளியேறும்
 2-4மிலி விந்து நீரில் சுமார் 100 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையதுஇந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும். ஆணின் உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும்.
உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்திக் கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து அதன் உள்ளே புகுகின்றன. 100 - 300 மில்லியன் விந்தணுக்கள் ஒருதடவையில் வெளி வந்தாலும் முட்டை கருவுற ஒரே ஒரு விந்தணு மட்டுமே தேவையாகின்றது.
கருவுறுதல் அல்லது சினைப்படுதல்:
கருமுட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது. ஆனால் ஆணின் விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ணி, அந்தத் துளையின் வழியாக விந்தணு உள்ளே நுழைந்துவிடும். 
பல மில்லியன் விந்தணுக்கள் ஒன்றோடொன்று முட்டி மோதி கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும். கடைசியாக ஒன்றே ஒன்று மட்டுமே வெற்றிவாகை சூடும். 
உள்ளே நுழைந்த விந்தணு கருமுட்டையின் குரோமோசோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் என்கிறோம். இதுதான் FERTILIZED EGG அதாவது கருமுட்டையாகும்.
கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப்பெருகும். இந்த கரு வளரும் நிலைக்கு வந்துவிடும், இது இரண்டு வாரங்களுக்குட்பட்ட வளர்ச்சியாகும். 
இரண்டு மாதம் வரை வளர்ச்சியடைகின்ற இந்த கட்டத்தை எம்பிரையோ Embryo என்று அழைக்கப்படும். இதன் பிறகு கருவை சிசு Fetus என்று கூறுகின்றோம். இந்த நிலையில் ஒரு புழுவைப்போன்று 1 அங்குல அளவு தான் இருக்கும். அதனால் தான் நமது பெண்கள் ஏதேனும் புழு, புச்சி உண்டாகி இருக்கிறதா? என்று கேட்பார்கள். இதற்கு மேலும் வளருகின்ற கருவைத் தான் குழந்தை என்று அழைக்க இயலும். 
பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?
ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆவதற்கு அவளுடைய கணவனின் விந்தணுவே காரணமாகின்றது.  பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும், ஆணின் விந்தணுவில் X அல்லது என்ற குரோமோசோம் இருக்கும். இதில் என்ற குரோமோசோம் பெண்ணை உருவாக்கும். Y என்ற குரோமோசோம் ஆணை உருவாக்கும்.
X என்ற குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X என்ற குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் மூலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)
என்ற குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y என்ற குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் மூலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)
பெண்ணின் சினை முட்டை வெறும் X என்ற குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் கர்ப்பப் பையினுள் செலுத்தப்படும் விந்தணுக்களில் X என்ற குரோமோசோம்களைக் கொண்ட ஆண் விந்தணுக்களும், Y என்ற குரோமோசோம்களைக் கொண்ட ஆண் விந்தணுக்களும், கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு விந்தணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்த ஆணின் விந்தணு X என்ற குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்த ஆணின் விந்தணு Y என்ற குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.
கர்ப்பக் கோளறையில் (கர்ப்பப்பையினுள்) செலுத்தப்படும் ஆணின் இந்திரியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது, பெண்ணின் சினை முட்டையால் அல்ல. 
குழந்தை தன் தாயின் கருவறையில் வளர்ந்துக் கொண்டிருக்கும் காலக் கட்டங்களில் அவனுடைய அனைத்து உறுப்புகளுமே திடீரென தோன்றிவிடுவதில்லை. ஓவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு காலக்கட்டங்களில் வளர ஆரம்பித்து முழு வளாச்சியை அடைகின்றது.

மனித கருவளர்ச்சிகளின் நிலைகளை கருவுறுதல் முதல் குழந்தை பிறக்கும் வரை ஆராய்ந்தறிந்த கருவியலின் நவீன ஆய்வாளாகள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
பெண்ணிற்கு மாதவிடாய் வெளிவந்த 14 ஆம் நாள் சினைமுட்டை ஒன்று சினைப்பையிலிருந்து வெடித்து பலோப்பியன் டியூப் என்ற குழாய்க்கு வருகிறது. இந்த சினை முட்டை 1/175 அங்குலம் அளவுக்கு மிகச் சிறியதாகும்.
ஆண், பெண் சேர்க்கையின் போது, ஆணின் உயிரணுவும் இந்த பலோப்பியன் டியூப் என்ற குழாய்க்கு வந்து சேர்கின்றது. ஆணின் உயிரணுவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்து கருவுறுதல் இங்கு தான் (பலோப்பியன் டியூப்) நடைபெறுகிறது. கருவுற்றபின் ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையின் கரு (Nucleus) வும் சோந்த ஒரு பரிபூரண செல் ஆக அந்த மனித கரு மாறுகிறது. இதற்கு "Zygote" என்று ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள்.
கருவுற்ற 12 மணி நேரம் வரை ஒரே செல் (Single Cell) ஆக இருந்த அந்தக் கரு அதற்கு பிறகு 30 ஆவது மணி நேரத்திற்குள், ஒரு செல் இரண்டு செல்களாக மாறுகின்றது. 
கருவுற்ற 45 ஆவது மணி நேரத்திற்குள் அந்த இரண்டு செல்கள் நான்கு செல்களாகின்றது. இவ்வாறு அந்த செல்கள் இரட்டிப்பாகிக் (Cell Division) கொண்டே சென்று, 72 மணி நேரத்திற்குள் அவைகள் 16 செல்களாகின்றது.
கருவுற்ற 4 வது நாள் இந்தக் கரு "blastocyst" என்ற நிலைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் cell differentiation என்ற நிகழ்வு ஏற்பட்டு தனித்தனி தன்மைகளையுடைய செல்கள் தோன்றுகிறது. 
அதாவது இரத்தத்தை உருவாக்கும் அணுக்கள், தோல்களுக்கான அணுக்கள், தசைகளுக்கான அணுக்கள், நரம்புகளுக்கான அணுக்கள் போன்ற தனித்தனியான குணங்களையுடைய செல்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. 
ஒரு செல்லிலிருந்து தோன்றிய அந்தக் கரு தொடர்ந்து செல் பிரிதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து இரட்டிப்பாகிக் கொண்டே வந்து குழந்தை பிறக்கும் போது அக்குழந்தை 2 பில்லியனுக்கும் அதிகமான செல்களையுடையதாக இருக்கிறது.
"blastocyst"என்ற நிலையில் பலோப்பியன் டியூப் (fallopian tube)-ல் உள்ள அந்த மனிதக் கரு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து 8 அல்லது 9 ஆவது நாட்களில் கர்பப்பையை வந்தடைந்து, அதன் சுவர்களில் (uterus lining) ஒரு அட்டையைப் போன்று ஒட்டிக் கொண்டு தொங்குகிறது. இப்போது அந்தக் கரு "embryo" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.
கருவுற்ற 15 முதல் 21 ஆம் நாட்களில் கருவைச் சுற்றியுள்ள ‘chorianic layer’ என்ற உறைக்கு உள்பகுதியில் தோன்றிய ‘yolk sac’ என்ற பகுதியிலிருந்து கருவிற்குத் தேவையான ‘blood cells’ உற்பத்தியாகி பின்னர் இரத்த நாளங்கள் (blood vessels) தோன்றுகிறது. 
இதே நேரத்தில் இந்த கருவைச் சுற்றியுள்ள இந்த சவ்வுக்கு வெளிப்புறம் Lucunae என்ற பகுதியில் தாயின் இரத்த நாளங்கள் தோன்றுகிறது. இதிலிருந்தே கருவிற்குத் தேவையான ஆக்ஸிஜனும், சத்துப் பொருட்களும் அளிக்கப்படுகின்றன.
கருவுற்ற 18 ஆம் நாள் கருவின் உட்புறம் தோன்றிய இரு குழாய்கள் ஒன்றினைந்து பின்னர் அவைகள் நகர்ந்து இருதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வருகிறது. இதுவே பின்னர் இருதயமாக வளாகின்றது.
கருவுற்ற 21 ஆம் நாள், கருவின் உட்புறம் தோன்றிய இரத்த நாளங்கள் placenta வாக வளாச்சியுற்று (தொப்புள் கொடி என்றும், நஞ்சுக் கொடி என்றும் அழைக்கும்) அவைகள் கருவைச் சுற்றியுள்ள சவ்வுக்கு (blood barrier) வெளிப்புறமாக உள்ள தாயின் இரத்த நாளங்களிலிருந்து தனக்குத் தேவையான சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் (சுவாசக்காற்று) எடுத்துக் கொள்கிறது.
கவனத்தில் கொள்ளவும்: தாயின் இரத்தம், கருவின் இரத்தத்தோடு எந்த நேரத்திலும் நேரடித் தொடாபுக் கொள்வதில்லை. கருவைச் சுற்றியுள்ள Blood barrier என்ற சவ்வு இவ்வாறு நேரடித் தொடர்பு ஏற்படாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. தாயின் இரத்தமும், குழந்தையின் இரத்தமும் வெவ்வேறு தன்மையுடையவைகளாகக் கூட இருக்கலாம் ((Positive or negative blood group)
தொப்புள் கொடியின் வேலை என்னவெனில், இது கருவிற்குத் தேவையான சத்துக்களையும், சுவாசக் காற்றையும் தாயின் இரத்த நாடிகளிலிருந்துப் பெற்றுக் கொண்டு, கருவின் கழிவுப் பொருட்களை (காபன்டை ஆக்ஸைடு) தன் தாயின் இரத்த நாளங்களுக்கு அனுப்பி தாய் மூலம் வெளியேற்றுகிறது.
இந்நிலையில் இந்தக் கருவின் அளவு (Size) 6 மில்லி மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது.
கருவுற்ற 18 ஆம் நாள் தோன்றிய இருகுழாய்கள் ஒன்றினைந்து இதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வந்த பின் 22 ஆம் நாள் தாயின் இரத்த நாளங்களிளிலிருந்து சுவாசக்காற்றை தொப்புள் கொடிவழியாகப் பெற்று முதன்முறையாக துடிக்கத் தொடங்குகின்றது. இதுவே கருவின் முதல் இதயத் துடிப்பாகும். பின்பு இந்தக் குழாய்கள் வளைந்து, நெளிந்து முழு இருதயமாக வளர்வதற்கு சில மாதங்களாகின்றன.
கருவுற்ற 22 ஆம் நாள் கருவின் முகம் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 31 ஆம் நாள் கருவின் மூக்கு மற்றும் கண்கள் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 33 ஆம் நாள் கருவின் branchial arches எனப்படும் பகுதிகளுக்கிடையில் காதுகள் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 49 ஆம் நாள் வரை ஆண், பெண் சிசுக்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஆண் சிசு
உருவான சிசு ஆணாக அல்லது பெண்ணாக மாற்றமடைதல்:
கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.
கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.
பிறப்புறுப்புக்கள் (reproductive organs) நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது. 
கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது. 
கவனித்துக் கொள்க: இந்நிலையில் அனைத்து மனித உறுப்புகளும் உருவாக துவங்கியிருந்தாலும் அவைகள் முழுவளர்ச்சியைப் பெற்றுவிடவில்லை. உறுப்புகள் தொடாந்து வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதுவரை ‘embryo’என்றழைக்கப்பட்ட மனிதக் கரு இப்போது ‘fetus’ என்றழைக்கப்படுகிறது.
கருவுற்ற 33 ஆம் நாள் ‘branchial arches’ என்ற பகுதிகளுக்கிடையில் உருவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. 5 ஆவது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளாச்சி பெறுகின்றன. 6 ஆவது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.
கருவுற்ற 31 ஆம் நாளிலிருந்தே கண்கள் வளர துவங்கியிருந்தாலும் 40 ஆம் நாள் தான் இமைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது. மூடப்பட்ட கண்ணின் இமைகள் 7 ஆவது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழுவளாச்சியை அடைந்து பார்க்கும் சக்தியைப் பெறுகின்றது.
5 ஆவது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளாச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குல நீளமாகும்.
6 ஆவது மாதம் 13 அங்குல நீளமும், ஒரு றாத்தல் எடையும் உடையதாக இருக்கும் அக்குழந்தையின் கண் இமையின் முடிகள் வளாந்து விடுகின்றது. ஆனால் தலை முடி இதுவரை வளராமலே இருக்கின்றது.
கருவுற்ற 22 ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56 நாட்களுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் கர்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும் போது இது இரத்தத்தை நுரையீரக்குள் நெலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றை பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும். 
ஆனால் காப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக் காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இருதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகின்றது. 
குழந்தை பிறந்ததும் அது நுரையீரல் வழியாகச் சுவாசிப்பதால் இரத்தம் நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுச் செல்கின்றது. முன்னர் இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லாமல் நேரடியாக மற்ற பாகங்களுக்குச் சென்ற வழி குழந்தை பிறந்ததும் அடைக்கப்படுகின்றது.
கருத்தரிக்கும் காலம்...
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். மலடி, மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி, ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின் கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர்.
புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும். 
கருத்தரிக்கக்கூடிய காலம் என குறிப்பது
மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால் விந்தணு சினை முட்டையில் சேர்ந்து கரு உண்டாகும்.
சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும்.
கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறைகள்
1. தேதிகொண்டு அறியமுடியும்
மாதவிலக்கு சுழற்சி ஆன முதல் நாள், நாள் ஒன்று என்று கணக்கில் கொண்டு கணக்கிட வேண்டும். 
பொதுவாக மாதவிலக்கு சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும். மாதவிலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இது மாறுபட்டு இருக்கும். 
மாத விலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இந்த முறையில் கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடுவது கடினம். மாதவிலக்கு சுழற்சி 28-30 நாட்கள்உள்ளவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு 12 முதல் 16 நாட்களுக்குள் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.

2. யோனிக்கசிவு அதிகரித்து காணும்
யோனிக்கசிவு (Vaginal secretions) கருமுட்டை வளர்ச்சி முழுமையானதாக ஆனபின்பு அது விந்தணுவுடன் சேரும் காலம் யோனிக் கசிவு அதிகம் காணப்படும். இதனை வைத்து கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடலாம்.
கருத்தரிக்கும் காலம் அறிந்த பின்பு உறவு கொண்டால் விந்தணு கருப்பையினுள் எளிதாக ஊர்ந்து சென்று சினை முட்டையுடன் இணைய யோனிக்கசிவு உதவி செய்கிறது.
3. காமக்கிளர்ச்சியின்போது Progesterone என்னும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் உடல் வெப்பம் 0.30 அளவு உயர்கிறது. இதை வைத்து கருவுற ஏற்ற காலத்தை அறிந்துகொள்ளலாம்.

12 முதல் 16ம் நாளுக்குள் கருப்பையின் உட்சுவர்கள், கனத்து, தடித்து கருவை ஏற்கக்கூடிய நிலையில் இருக்கும். இக்காலங்களின் நோயின் தாக்குதல்இல்லாமலும், மனச்சிக்கல் இல்லாமலும் உறவு கொண்டால் கரு உருவாகும்வாய்ப்புகள் கூடும்.
சுருக்கமாக:விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருதலை கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது.
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொரு விந்தணுவும் 0.5 மி.மீ நீளம் உடையது. 
ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது. 
ஆணுடைய விந்தணுவிலிருந்து குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது. இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருக்கட்டப்பட்ட முட்டையாகும். 
கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் FALLOPIAN TUBE  ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளருகின்றது. 
ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன.
கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன
கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன
கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது.
கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.
கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. 
அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!
கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.
கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 
கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.
கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.
கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது. 
கர்ப்பத்தின் நலவழியும் உணவூட்டமும்
கர்ப்பத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான நியதிகள்.
ஓரளவான உடற்பயிற்சியுடன், நல்ல மனப்பாங்குடனும் இருத்தல் வேண்டும். இவை கருவின் மீது சாதகமான விளைவை உண்டாக்குகின்றன. வேலை செய்வதன் மூலம் நரம்பு மற்றும் இரத்த உற்பத்தி, சுவாசத்தொகுதி ஆகியவற்றின் பணிகள் ஊக்குவிக்கப்பட்டு அவளது வளர்சிதை மாற்றமும் சீரடைகின்றது. சோர்ந்து போய் படுத்திருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல் ஆகியவை உடல் பருமன் அதிகரித்தல், மலச்சிக்கல், தசைகளின் தளர்ச்சி, பிரசவத்தின் போது கருப்பையின் மந்தநிலை ஆகியவற்றை உண்டாக்குகின்றன.
கனமான பொருட்களைத் தூக்குதல், அதிகமாகக் குதித்தல், மிகையான உடற்களைப்பு ஆகியவற்றைக் கருவுற்றிருக்கும் பெண் தவிர்க்க வேண்டும். அத்துடன் அதிகமான தட்பவெப்ப நிலைகள், இரசாயனப் பொருட்களின் விளைவுகளுக்கு உட்படுதல் ஆகியவையும் தவிர்க்கப்படுதல் வேண்டும். இல்லையெனில், கருவிலிருக்கும் சிசு பாதிக்கப்பட நேரிடலாம்.
கால்களினால் இயக்கப்படுகின்ற தையல் பொறியை இயக்குதல், சைக்கிள் ஓட்டுதல், குதிரைச்சவாரி போன்ற உடலைக் குலுக்கும் பணிகளும், மிகையான பிரயாசையுடன் உள்ள விளையாட்டுக்களும் தவிர்க்கப்பட வேண்டும்.
ஓய்வான நேரங்களில் கர்ப்பிணி சிறிது நேரம் உலாவச் செல்லலாம். இது நீண்ட நேரமாகவோ, அசதியை உண்டாக்கும் படியாகவோ இருக்கக் கூடாது. நடந்து செல்லுதல் கர்ப்பிணிகளின் மனோ நிலைகளுக்கும், உடற்பணிகளுக்கும் இதமளிக்கின்றது. காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில் நீண்ட நேரம் தங்கியிருப்பதானது, கருப்பை உட்சிசுவிற்கு உயிர்வளி (Oxygen) வினியோகத்தை ஊக்குவிக்கின்றது.
கருவுற்றிருக்கும் ஒரு தாய் ஒரு நாளைக்குக் குறைந்தது தினமும் 8 மணி நேரமாவது தூங்கவேண்டும். இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கக் கூடாது. ஏனெனில், கர்ப்பத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு மேற்குறிப்பிடப்பட்ட குறைந்த பட்ச உறக்கம் அவசியமாகின்றது. கர்ப்பிணி தனது வலது பக்கமாகவோ அல்லது மல்லாந்தோ படுத்திருப்பது நல்லது.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலும் உடலுறவைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், உடலுறவின் போது ஊக்குவிக்கப்படும் குருதி வினியோகமும், கருப்பையின் கிளர்த்தலில் ஏற்படும் மாற்றங்களும் கருச்சிதைவை உண்டாக்கலாம். அதேபோல், கர்ப்பத்தின் கடைசி இரண்டு மாதங்களிலும் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தல் சிறந்ததாகும். இதன் மூலம் பாலுறுப்புக்களில் கிருமிப்பாதிப்பினால் நோய்த்தாக்கம் (Infection) ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
மதுபானங்களும், புகைப்பிடித்தலும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் நிகட்டினும், மதுசாரமும் கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவிற்கும் நச்சு விளைவுகளை உண்டாக்குகின்றன.
பொதுவாக கர்ப்பகால இறுதியில், கர்ப்பிணியையும், கருப்பை உட்சிசுவையும் பாதிக்கக்கூடிய தொற்று நோய்களில் இருந்து கர்ப்பிணியைப் பாதுகாக்க வேண்டும்.
சரும (தோல்) பாதுகாப்பு.
கர்ப்பிணி, தனது தோலை நன்கு பராமரிக்க வேண்டும். முனைப்பான வியர்வைச் சுரப்பிற்கு தோலின் சுத்தம் உதவுகின்றது. வெளிப்படும் வியர்வை மூலம், தீய கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து அகற்றப்படுகின்றன.
தோலின் பராமரிப்பினால், அதன் கழிவகற்றும் தொழிற்பாடு ஊக்குவிக்கப் படுகின்றது. எனவே, கர்ப்பத்தின் போது மிகையாக இயங்கும் சிறுநீரகங்களின் (kidneys) பணிகளும் சீரடைகின்றன.
கர்ப்பிணிகள் துளிக்குளியல் (Shower Bath) எடுப்பது சிறந்ததாகும். ஆனால் தண்ணீர் ஓரளவு வெதுவெதுப்பாக இருத்தல் வேண்டும். கர்ப்பத்தின் இறுதி வாரங்களில், இளஞ்சூடான நீரினால் பஞ்சுக் குளியல் (Sponge Bath) எடுப்பது நல்லது. குளியலின் பின்னர் உலர்ந்த துண்டால் நன்கு உலர்த்திவிட வேண்டும்.
தினமும் இரண்டு தடவைகள் மென்மையான சோப்பும், சூடான நீரும் கொண்டு பாலுறுப்புக்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளைபடுதல்போன்ற நோய் நிலைகள் இருப்பின் ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
கர்ப்பிணி தனது வாயை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் மெல்லிய பற்தூரிகை(Soft Toothbrush)யினால் பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு உணவின் பின்னரும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
வருங்காலப் பாலூட்டத்திற்காக, கர்ப்பத்தின் போதே மார்பகங்களைச் சிறப்பாகப் பேண வேண்டும். மார்பகங்களை மென்மையான சோப்பும், தண்ணீரும் கொண்டு தினமும் கழுவி ஒரு துவாலையால் நன்கு உலர்த்த வேண்டும். இவ்வகை எளிய முறையினால் பாலூட்டத்தின் போது மார்பகக்காம்புகளில் பிளவுகள் தோன்றுவதையும், மார்பகங்களில் ஏற்படுகின்ற அழற்சியையும் தவிர்க்க முடிகின்றது. இதனால் மார்பகம் பிறக்கப்போகும் குழந்தைக்கு வருங்காலப் பாலூட்டத்திற்குத் தயார்நிலையில் வைத்திருக்க இயலும்.
மார்பகக்காம்புகள் தட்டையாகவோ, உள்நோக்கி வளைந்தோ இருந்தால், அவற்றை சுத்தமான விரல்களைக் கொண்டு மஸாஜ் செய்ய வேண்டும். ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் கொண்டு அவற்றைக் கவனமாக முன்னோக்கி இழுக்க வேண்டும். 3-4 நிமிடங்கள் நீடிக்கும் வகையில் தினமும் 2-3 முறைகள் மஸாஜ் செய்ய வேண்டும்.
மார்புக் கச்சைகள் (Bra’s) முரடான நூல் இழைகளால் செய்யப்பட்டு, மார்பை இறுக்கமாகப் பற்றி (அதிகமாக அழுத்தாமல்) இருக்க வேண்டும். மார்புக் கச்சைகளின் குவியப் பகுதி மார்பகத்தின் வடிவத்திற்கும். அதன் அளவிற்கும் ஏற்றதாக இருக்கக வேண்டும்.
உடைகள்
கர்ப்பிணியின் உடைகள், குறிப்பாக வயிற்றுக்கும், மார்புக்குமானவை வசதியான தாகவும், தளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். கர்ப்பத்தின் இரண்டாவது பகுதியில் வயிற்றுக் கட்டுகள் போடப்பட வேண்டும். கட்டுகள் வயிற்றை அமுக்காமல் அவற்றைக் கீழிருந்து தாங்கவேண்டும். வயிற்று உப்புசத்தின் மிகையான நிலையைத் தவிர்க்கவும், கீழ் முதுகுப் பகுதியில் (நாரிப் பகுதி) தோன்றும் புவிஈர்ப்பு உணர்வைத் தவிர்க்கவும் கட்டுகள் உதவுகின்றன. (கர்ப்பிணிகளில் புவிஈர்ப்பு மையம் இடம்பெயர்வதால் முதுகுத் தசைகள் பழுதடைகின்றன.)
கர்ப்பிணிகளது காலணிகள் வசதியானதாக இருக்க வேண்டும். உயர்ந்த குதிகால்கள் கொண்ட காலணிகளை அணியக் கூடாது. ஏனெனில் இவை கால்கள் மற்றும் முள்ளந்தண்டு ஆகியவற்றின் தசைகளைச் சோர்வடையச் செய்கின்றன.
கர்ப்பிணிகளின் நலவழி முறைகளின் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
01. கர்ப்பிணியின் உடல் நலம் பேணப்பட்டு, பலமடைகின்றது.
02. கருப்பை உட்சிசுவின் சாதாரணமான வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது.
03. கர்ப்பமும், கர்ப்பத்திற்குப் பின்னான காலமும் சீராக அமைகின்றது.
04. பெண், பாலூட்டத்திற்கு தயார்நிலைப் படுத்தப்படுகின்றாள்.

கர்ப்பிணிகளின் உணவூட்டம்
கர்ப்பிணியின் நலமான வாழ்வுக்கும், கருப்பை உட்சிசுவின் முறையான வளர்ச்சிக்கும், கர்ப்பகாலத்தில் போஷாக்கான உணவு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கர்ப்பிணிக்கான தவறான உணவூட்டம் தாய்க்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி, கருப்பை உட்சிசுவின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.
கர்ப்பத்தின் போது பெண்களில் நிகழும் உடலியல் மாற்றங்களையும், கர்ப்பிணிக்கும், வளரும் சிசுவிற்கும் மிகையாகத் தேவைப்படுகின்ற ஊட்டப் பொருட்களையும் கவனத்திற்கொண்டு கர்ர்ப்பிணிகளுக்கான உணவு முறை திட்டமிடப்படவேண்டும்.
கர்ப்பத்தின் முதற்பகுதியில், உணவு வழக்கத்திற்கு மாறாக இல்லாமல், நல்ல ஊட்டப் பொருட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் உணவில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. கர்ப்பத்தின் முதல் மாதங்களில் சுவை மாறுபாடடைகின்றது. 3-4 ஆவது மாதங்களில் சிறப்பான உணவுகளுக்கான ஆசை எதுவும் இருப்பதில்லை.
பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் துவக்க மாதங்களில் (குறிப்பாகக் காலை வேளைகளில்) குமட்டல் காணப்படுகின்றது. இத்தகைய பெண்கள் காலை உணவை படுக்கையில் இருந்து கொண்டே அருந்திய பின்னர், எழுந்து நடமாடலாம்.
கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் காய்கறிகளும், பால் பொருட்களும் வழங்கப்படலாம். இறைச்சி, மீன்வகைகளை குறைந்தளவில் உள்ளெடுக்கலாம். பழங்கள், உலர் விதைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் தாய்க்கும், சேய்க்கும் தேவையான விட்டமின்கள் அதிகளவில் காணப் படுவதால் அவை மிகவும் பலனளிக்கின்றன. வாரத்தில் 3-4 தடவைகள் மாமிசம் கொடுக்கப்படலாம். மாமிசத்திற்கும், மீன்களுக்கும் பதிலாக பாலும், காய்கறிச் சாறுகளும் கொடுக்கப் படலாம். 
விலங்கினப் புரதத் தேவைகளை ஈடுசெய்ய முட்டை, தயிர், பாலோடு மற்றும் ஏனைய பால் பொருட்களைக் கொடுக்கலாம்.
கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் உணவுடன் சேர்க்கப்படவேண்டிய உப்பின் அளவு குறைக்கப்பட வேண்டும். மதுபானங்கள், மிளகு, கடுகு, வினிகர், காரமான மசாலா நிறைந்த பொருட்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
கர்ப்பத்தின் போது கல்லீரல், சிறு நீரகங்கள், ஏனைய உறுப்புக்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகப் பணிபுரிகின்றன. இவற்றின் பணிகள் சீர்குலையாமல் இருக்க, மேற்படி உணவுக்கட்டுப்பாடுகள் அவசியமாகும்.
கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவின் வளர்ச்சிக்கும் அதிகளவில் விட்டமின்கள் தேவைப்படுகின்றன. அரைகுறையான விட்டமின்கள் உடலுறுப்புக்களின் பணியாற்றும் திறனைக் குறைப்பதோடு, நோய்த் தொற்றுகளுக்கு எதிரான உடலின் எதிர்ப்பு சகதியையும் குறைக்கின்றது. விட்டமின்கள் பற்றாக் குறையாக இருந்தால் மாலைக்கண், ரிக்கட்ஸ், ஸ்கர்வி, நரம்பு மண்டல நோய்கள் உண்டாகின்றன. கர்ப்பகாலத்தின் போது விட்டமின் பற்றாக்குறை காணப்பட்டால் சிசுவின் விகார வளர்ச்சி, கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம் ஆகியவை ஏற்படலாம். ஆகவே, பெண்ணின் இன்றியமையாத பணிகளுக்கு அதிகளவு விட்டமின்கள், அதிகளவு விட்டமின்கள் கொண்ட உணவுகள் பரிந்துரைக்கப் படுகின்றன.
கர்ப்பிணி தினமும் 4 தடவைகள் சாப்பிட வேண்டும். தினசரி உணவின் 25-30 வீதத்தினை காலை உணவிலும், 40-45 வீதத்தினை மாலை உணவிலும், 15-20 வீதத்தினை இரவு உணவிலும் எடுக்க வேண்டும்.
கர்ப்பிணி தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், புளித்த பால் ஆகிய வற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்

No comments: