சீமான் திருமணம்.. பிரபாகரன் திருமண நாளில் மணம் முடிக்கிறார்!

சென்னை: நீண்ட நாள் பிரம்மச்சாரியான இயக்குநர் – தமிழுணர்வாளர் – நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்த அக்டோபர் 1-ம் தேதி அவர் திருமணம் நடக்கிறது.
ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளி ஒருவரை அவர் மணக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் போன்ற படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்று கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
நாம் இதுகுறித்து சீமானிடமே கேட்டோம்.
அவர் கூறுகையில், “உண்மைதான் தம்பி… அக்டோபர் ஒன்றில் அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.
பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த படலம் முடிந்துவிடும்.
ஆனால் இந்த வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் என்பது உறுதி.. எல்லோரையும் அழைத்து விரைவில் விவரமாக அறிவிக்கிறேன்,” என்றார்.
நீங்கள் மணக்கப் போவது ஈழப் பெண் போராளியை என்று வரும் செய்திகள் உண்மையா?
விரிவாக பிறகு சொல்கிறேன். அதற்குரிய தருணம் வரட்டும், என்றார்.
தான் திருமணம் செய்யவிருக்கும் பெண் யாரென சீமான் தெரிவிக்காவிட்டாலும், ஈழத்தைச் சேர்ந்த போராளிப் பெண் ஒருவரையே அவர் மணக்கப் போகிறார் என சீமானுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், முன்னாள் அமைச்சர் கா காளிமுத்துவின் உறவுக்காரப் பெண்ணை அவருக்குப் பேசி வருவதாக இன்னொரு தரப்பினர் தெரிவித்தனர்.
பெண் யாராக இருந்தாலும்…. வாழ்த்துக்கள் சீமான்!
No comments:
Post a Comment