Sunday, October 7, 2012


12 சதவிகித இந்தியப் பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகிறார்கள்-ஏ.சி. நீல்சன் ஆய்வு


டெல்லி: இந்தியாவில் 12 சதவிகிதம் பெண்கள் தான் மாதவிடாய் (பீரியட்ஸ்) நேரத்தில் நாப்கின் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 88 சதவிகிதம் பெண்கள் துணி, சாம்பல், உமி போன்றவற்றைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு இனப்பெருக்க பாதையில் நோய் தொற்றும் அபாயம் 70 சதவிகிதம் உள்ளது.

சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றுவதால் 12 முதல் 18 வயதுள்ள பெண்கள் ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. ஒரு வருடத்தில் 50 நாட்கள் பள்ளிக்கு செல்வதில்லை. இதனாலேயே 23 சதவிகித பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.

பண வசதியில்லாததால் தான் அவர்களால் சானிடரி நாப்கின் வாங்க முடியவில்லை. இந்தியாவில் உள்ள 70 சதவிகிதப் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு நாப்கின் வாங்கித் தரும் அளவுக்கு வசதி இல்லை என்கிறார்கள்.

ஏ.சி. நீல்சன் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பை பிளான் இந்தியா ஆதரித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வயதுக்கு வந்த 1,033 பெண்களும், 151 பெண் மருத்துவர் [^] களும் பங்கேற்றனர்.

இது குறித்து பிளான் இந்தியாவின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் பாக்யஸ்ரீ டெங்க்ளே கூறியதாவது,

இந்த ஆய்வின் மூலம் இந்தியப் பெண்களின் சுகாதாரக் கேடு பற்றி தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் 100 சதவிகிதப் பெண்களும், இந்தோனேசியாவில் 88 சதவிகிதப் பெண்களும், சீனாவில் 64 சதவிகிதப் பெண்களும் சானிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர் என்றார்.

இது குறித்து ஜீவன் மாலா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மால்விகா சபர்வால் கூறியதாவது,

மாதவிடாய் கால சுகாதாரம் குறித்துப் பேசுவது இன்னும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருக்கிறது. அந்த நேரங்களில் பெண்கள் சமையல் அறைக்குளளும், கோயில்களுக்குள்ளும் அனுமதிக்கப்படுவதில்லை. சிலர் அந்த சமயத்தில் குளிப்பது கூட இல்லை. அந்த வழக்கமெல்லாம் மாற வேண்டும்.

பீரியட்ஸ் நேரத்தில் பெண்கள் 2 தடவைக்கு மேல் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை நாப்கின் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறுநீர் பாதைக்குள் பாக்டீரியா நுழைவதும், கருப்பை பாதிப்பும் ஏற்படக்கூடும் என்றார்.

சுமார் 97 சதவிகித கைனகாலஜிஸ்ட்கள் நாப்கின் பயன்படுத்துவதால் இனப்பெருக்க பாதை பாதிப்பு குறையும் என்று நம்புகின்றனர்.

டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் [^] , லக்னோ, ஹைதராபாத், கோரக்பூர், ஔரங்காபாத் மற்றும் விஜயவாடாவில் எடுத்த கணக்கெடுப்பில் பெண்கள் பீரியட்ஸ் நேரத்தில் 2.2 நாட்களுக்கு சற்று மந்தமாகவே உள்ளனர். கிழக்கு இந்தியாவில் உள்ள 83 சதவிகித பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு சானிடரி நாப்கின் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்றனர்.

30 சதவிகித வட இந்திய பெண்கள் தாங்கள் பருவம் அடைந்ததும் பள்ளியில் இருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்தனர்.

மென்சுரல் சுகாதாரம் குறி்தது மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கிராமப்புற பெண்களும் சானிடரி நாப்கின் பயன்படுத்தும் வகையில் ரூ. 150 கோடி செலவில் ஒரு திட்டம் கொண்டு வரவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு 6 நாப்கின் உள்ள பாக்கெட் 1 ரூபாயக்கு வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள பெண்களுக்கு அதே பாக்கெட் 5 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்த திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்த திட்டம் குறித்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,

இத்திட்டம் முதல் கட்டமாக நாட்டில் உள்ள 600 மாவட்டங்களில் 25 சதவிகிதம் அதாவது 150 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும். முதல் வருடத்தில் 150 மாவட்டங்களில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தில் தென் இந்தியாவில் இருந்து 4 மாநிலங்கள், மஹாராஸ்டிரா, குஜராத்தில் இருந்து 30 மாவட்டங்களும், வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து 120 மாவட்டங்களும் சேர்க்கப்படும்.

முதல் கட்டத்தில் 10 முதல் 19 வயதுள்ள சுமார் 1. 5 கோடி பெண் பிள்ளைகள் பயனாளிகளாக இருப்பார்கள். இதில் 70 சதவிகிதம் அதாவது 105 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு மேலும், 30 சதவிகதம் அதாவது 45 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழும் உள்ள பெண்கள் ஆகும் என்று அவர் கூறினார்.

No comments: