கணவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் விரதம் இருந்து வேண்டுதல் நிறைவேற்றும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் அலகு குத்தி காவடி எடுப்பதில்லை. ஆனால் அடிக்கடி முடியாமல் போகும் கணவரின் உடல் நலனில் அக்கறை கொண்டு கவலைப்படுகின்றனர்.
இன்றைய நாகரீக உலகில் முறையான உணவுப் பழக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவு உற்பத்தி மற்றும் வேலைப் பளு போன்ற பல காரணங்களால் மனிதர்களின் உடலில் நோய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
தங்களுடைய கணவரின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை குறித்து பத்தில் எட்டுப் பெண்கள் பெரிதும் கவலையடைந்து வருவதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள காப்பீடு நிறுவனம் 3000 பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 50 விகிதம்பேர் தங்களின் துணைவர்கள் பெருத்த தொந்தியுடைவர்களாக காணப்படுவதால் தாம் கவலையடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். 37 சதவிகிதம் பேர் தங்களது கணவனின் அதிக எடை குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ளனர்.
ரொம்ப உழைக்கிறார்
தமது துணைவர்களின் அலுவலகங்களில் வேலைப் பளு, உறக்கமின்மை, போதிய உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுகளை உட்கொள்ளல் போன்றன மனைவியர்களின் பிரதான கவலைக்குரிய விசயங்களாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்களது அலுவலகங்களில் தங்களது கணவர்மார்களுக்கு அதிகமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
நான்கில் ஒரு சதவிகித பெண்கள் கொழுப்பு மிக்க உணவுகளை தமது ஆண்கள் அதிகமாக உட்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமற்ற சூழல்
பெரும்பான்மையான பெண்கள் தமது கணவர்களின் உடற்பயிற்சி முதல் சமநிலையான வாழ்க்கை வரை கவலை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
31 சதவீதமான பெண்கள் தங்களது கணவர்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லையென தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமற்ற முறையில் தொழில் புரிவதாக அதிக எண்ணிக்கையான பெண்கள் விமர்சித்துள்ளனர். 26 வீதமான ஆண்கள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை உண்பதாகவும், 23 சத வீதமானவர் முறையான உறக்கம் கொள்வதில்லை எனவும், 19 சதவீதமானோர் உணவை புறக்கணிப்பதாகவும் மேலும் 19 சதவீதமானோர் அதிகமாக மது அருந்துவதாகவும் அவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர்.
பத்து சதவீதமான பெண்கள் தமது கணவர் அலுவலக வேலைகளை வீட்டிலும் வந்து செய்வதால் அவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
இந்த பொம்பளைங்களே இப்படித்தான் பாஸ், ரொம்ப பாவம்ஸ்!