Friday, August 17, 2012


சுகமாய் குழந்தை பிறக்கணுமா? இதப்படிங்க!

வலி அதிகம் என்றாலும் சுகப்பிரசவத்தையே பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவார்கள். இதற்குக் காரணம் சுகப்பிரசவம் என்றால் இரண்டு நாட்களில் எழுந்து நடமாடலாம் என்பதே. தவிர்க்க முடியாத காரணங்களினாலும், ஒரு சிலரின் உடல் அமைப்பினாலேயே சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறக்க நேரிடுகிறது. சிசேரியன் என்றால் பத்துநாள் படுக்கை வாசம். ஆறு மாதத்திற்கு பருமனான பொருட்களை தூக்கக் கூடாது என்று படுத்தி எடுத்துவிடுவார்கள். சுக பிரசவம் வேண்டும் என்று விரும்பும் கர்ப்பிணிகள் மகப்பேறு மருத்துவர்கள் கூறும் இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
நல்லா நடங்க
தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையுடனும் நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப் பிரசவம் எளிதாக இருக்கும். தினமும் சில சிறிய உடற்பயிற்சிகளை செய்யவும். உடற்பயிற்சி செய்யாதவர்கள், தினமும் படிகட்டுகளில் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம். ஏழு மாதத்திற்கு பிறகு நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும்.
கருப்பை பாதிப்பை நீக்கும்
தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக தண்ணீரை குடிப்பது கருப்பையில் நீரை தக்கவைத்து கொள்கிறது. அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் ப்ரோமிலெய்ன் அதிகமாக இருக்கிறது, இவை கருப்பை வாயில் ஏற்படும் பாதிப்பை நீக்கி மென்மையாக்குகிறது.
ரத்த அணுக்களை சீராக்கும்
மாதுளை பழத்தை தினமும் சாப்பிடவும். இது உங்கள் உடம்பில் மற்றும் உங்கள் குழந்தையின் உடம்பில் உள்ள இரத்த அணுக்களை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் மாதுளத்தை சாப்பிடுவதால் உங்கள் குழந்தை சிவப்பாகவும் அழகாகவும் பிறக்கும். ஏழு மாதத்திற்கு பிறகு பாலில் சில பூண்டுகளைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும்.
கூலா இருங்க
உங்களுக்குள் ஒரு உயிர் இருக்கிறது என்ற நினைப்பே உங்களை மகிழ்ச்சிப்படுத்தவேண்டும். எதற்கும் டென்சன் ஆகாமல் கூலா இருங்க என்கின்றனர் மருத்துவர்கள். உங்களுக்குப் பிடித்த பாடல்களை மென்மையான இசையை கேளுங்கள். அது கர்ப்பிணிகளுக்கும் நல்லது கருவில் உள்ள குழந்தைகளுக்கும் நல்லது. மனஅழுத்தமில்லாமல் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளவும்.
தினமும் உறங்கும் முன் இளஞ்சூடான நீரில் குளிக்கவும். அடிவயிற்றில் விளக்கெண்ணைய் தடவி இளம் சூடான நீரில் குளிப்பதால் சருமம் தளர்ச்சியடையும் மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கும்.
கசாயம் குடிங்க
தினசரி ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க காய்ச்சி அதில் சீரகம், பனங்கல்கண்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து கசாயமாக குடிக்கலாம்.
பிரசவ வலி வருகிறதா? ஒரு ஸ்பூன் தேன் ஊற்றி அதில் சீரகத் தூள் கலந்து சாப்பிடவும். பிரசவம் எளிதாகும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
வெந்தையக்களி
வெந்தையம் கால் ஸ்பூன், அரிசி அரை ஸ்பூன், வெள்ளைப்பூண்டு 5 பல் இதனை நன்றாக குழைய வேகவைத்து களி போல செய்து சாப்பிடலாம். இது உடல் சூட்டிற்கும் நல்லது. பிரசவம் எளிதாகும்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று எடுக்கலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

No comments: