Monday, July 30, 2012


பால் குடிக்கும் பழக்கம் வேணும்!


குழந்தை பருவம் முதல் சிறுவர் பருவம் வரை அனைவரும் பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். இந்த பருவத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கு பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. அதே நேரம் பெரியவர்களானதும், பால் குடிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், 30 வயதுக்கு மேல் பால் குடிப்பது அவசியம். இந்த பருவத்தில், எலும்பு தேய்மானம் போன்றவற்றை தவிர்ப்பதற்காக போதுமான கால்சியம் சத்தை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
மக்கள் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிட துவங்கும் போது, பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை தான், முதலில் தவிர்க்கின்றனர். இதற்கு பால் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்துவிடும், அலர்ஜி ஏற்படும் என்று பல்வேறு காரணங்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. அதில், ‘வைட்டமின் சி’ மற்றும் இரும்புச் சத்து ஆகியவற்றை தவிர, பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன.
கால்சியம் சத்திற்கு பால் குடிப்பது முக்கியம்:
இயல்பான ரத்த அழுத்தம், ரத்தத்தின் திடத்தன்மையை சீராக வைத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை பராமரிக்க, போதுமான அளவு கால்சியம் சத்து <உடலில் இருப்பது அவசியம். இது, மாதவிடாய் ஏற்படுவதற்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் குடல் புற்றுநோய் ஆகியவை வராமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 1,000 மி.கி., கால்சியம் ஒரு பெண்ணுக்கு தேவை. ஒரு கப் ஆடை நீக்கப்பட்ட பாலில் 300 மி.கி., கால்சியம் நிறைந்துள்ளது.
பால் சாப்பிட சிறந்த முறை:
சைவ உணவு சாப்பிடுபவர்கள், பால் குடிப்பது மிகவும் முக்கியம். ஆனால் 2 வயதுக்கு பின், குறைந்த கொழுப்பு நிறைந்த பால் குடிக்க வேண்டும். தற்போது வர்த்தக ரீதியாக, கொழுப்பு குறைக்கப்பட்ட, கொழுப்பு நீக்கப்பட்ட மற்றும் பாலாடை நீக்கப்பட்ட பால் என, பல்வேறு வகையான குறைந்த கொழுப்பு நிறைந்த பால் கிடைக்கின்றன.
பால் பொருட்கள் ஒவ்வாமை உடையவர்கள், கால்சியம் சத்து அதிகம் நிறைந்த சோயா, சோயா பால், பச்சை காய்கறிகள், எள், சூரியகாந்தி பூ விதைகள், கசகசா, பாதாம் மற்றும் பிற பருப்பு வகைகள், கேழ்வரகு மற்றும் கீரைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
தினசரி குடிக்க வேண்டிய பாலின் அளவு
வயது அளவு
4 -9 வயதுடைய குழந்தைகள் 2 கப் முதல் 3 கப்
10-16 வயது 3 கப் முதல் 4 கப்
பெரியவர்கள் 2 கப் முதல் 4 கப்
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் 3 கப் முதல் 4 கப்
குறிப்பு: ஒரு கப் பால்= 250 மி.லி.,

No comments: