Sunday, October 7, 2012


முதலிரவில் அவசரம் வேணாமே மாப்ள!!

J
ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ். ஏ.சி. கூபேயில் அன்றுதான் திருமணமான புதுமணத் தம்பதி. ரயிலிலேயே தன்னுடைய முதல் இரவைக் கொண்டாடத் துடித்தான் கணவன். ஆனால், கூச்சம் ததும்ப அந்தப் பெண் தயங்குகிறாள். கணவனோ அவசரத்தில் தவிக்கிறான். அவளுடைய மறுப்பு அவனுக்கு எரிச்சலை உருவாக்குகிறது. கணவனின் உதடுகளில் தகாத வார்த்தைகள்.
அடுத்த நாள். ஊட்டியில் தனி அறை. குளிர்காலக் கூட்டத் தொடரை ஆரம்பித்தான் கணவன். க்ளைமாக்ஸில் அந்தப் பெண்ணுடன் அவன் உறவைக் களிக்க முடியாத அளவு அவளின் உடம்பு அவனோடு இணையத் திணறியது. அவன் எவ்வளவோ முயற்சித்தும் ‘அது’ மட்டும் நடந்தேறவில்லை. அவனுக்குள் கோப அணை உடைந்துகொண்டது. ஏன்? எதனால்?
புதிதாகத் திருமணமான தம்பதியை முதல் இரவு அன்று அறைக்குள் தள்ளிவிட்டுக் கதவை சாத்திவிட்டாலே போதும், அவர்கள் எளிதாக செக்ஸில் ஈடுபட்டுவிடுவார்கள் என்று சமூகம் நினைக்கிறது. பொதுவாகத் திருமணம் செய்துகொள்கிற எல்லோரிடமும், ‘செக்ஸ் நடவடிக்கை திருப்திகரமாக இருக்கவேண்டும்; அடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிற இரண்டு எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு எதிர்பார்ப்புகளுமே எல்லாத் தம்பதிகளுக்கும் அவ்வளவு எளிதாகக் கைகூடுவது இல்லை. நிஜத்தில் செக்ஸ் செயல்பாடு என்கிற விஷயம் எளிமையானது அல்ல.

‘செக்ஸ் என்பது மனித இயல்புதானே; இயற்கையில் தானாக நடந்தேறிவிடும்தானே… இதைப்போய் ரொம்ப சீரியஸாக டாக்டர் சொல்கிறாரே’ என்று கருதலாம்.
செக்ஸ் உணர்வு என்பது மிக மிக இயல்பானதுதான். ஆனால், செக்ஸ் நடவடிக்கை என்பது எளிதானது அல்ல. அது கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். நாம் ஆரம்பத்தில் சொன்ன கதையில், செக்ஸ்பற்றி முழுமையாகத் தெரியாததனால்தான் அந்தக் கணவன் தன் மனைவி மீது குற்றம் சுமத்துகிறான். ‘ஏன் செக்ஸ் நடவடிக்கை அந்த இடத்தில் கடினமான விஷயமாக மாறிப்போனது? உண்மையான காரணம் என்ன?’ என்றெல்லாம் அமைதியான முறையில் தன்னுடைய மனைவியுடன் கலந்து பேசி முடிவு எடுக்காமல்போனதற்கு செக்ஸ் நடவடிக்கையை அந்தக் கணவன் ஈஸியாக நினைத்ததுதான் காரணம்.
அந்தப் பெண்ணுக்கு இருக்கிற பிரச்னைக்கு வெஜைனிஸ்மஸ் (Vaginismus)  என்று பெயர். வலியினாலோ அல்லது வலிக்குமோ என்கிற பயத்தினாலோ – அந்தப் பெண்ணினுடைய பிறப்பு உறுப்பின் உதடுகள் இறுக்கமாகிவிடுவதுதான் இங்கு பிரச்னை. இந்தச் சூழ்நிலையில், அதன் உள்ளே ஆண் உறுப்பை நுழைக்கவே முடியாது.
இதனை அந்தப் பெண் வேண்டும் என்று செய்வது இல்லை. அவளையும் அறியாமலேயே அவளுடைய பிறப்பு உறுப்பு இறுக்கமாகக் கதவடைக்கிறது. ‘இப்படி ஒரு பிரச்னை பெண்களுக்கு வரலாம்’ என்பதே பலருக்கும் ஆச்சர்யமான தகவல். சரி, சம்பந்தப்பட்டப் பெண்ணே அறியாமல் வெஜைனிஸ்மஸ் என்கிற பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் என்ன?
பெரும்பாலும் திருமணமான புதிதில் இப்படி வரலாம். அல்லது பின்னாட்களில்கூட சில பெண்களுக்கு ஏற்படலாம். அந்தப் பெண் – அந்தச் சமயத்தில் உணர்ச்சிவசப்படுவாள், மனதில் பெரு விருப்பம் இருக்கும், கணவன் மீது பேரன்புடன் இருப்பாள், ஃபோர்பிளே (Foreplay)  எனும் முன்விளையாட்டுகளிலும் தீவிரமான காதலுடன் செயல்படுவாள். ஆனால், க்ளைமாக்ஸ் கட்டத்தில் அதாவது உடல் உறவு சமயத்தில்தான் அவளையும் அறியாமல் பிறப்பு உறுப்பில் இந்தப் பிரச்னை அரங்கேறும். அந்தப் பெண்ணின் உடம்பே ஒருவிதமான விறைப்புத்தன்மைக்கு உள்ளாகிவிடும்.
நாம் மேலே சொன்ன கதையில் – கணவன் காட்டிய அவசரத்தையும் முரட்டுத்தனத்தையும் பார்த்து அந்தப் பெண் அதிர்ந்துபோயிருக்கிறாள். ‘அய்யோ வலிக்கும் போலிருக்கே’ என்கிற அதீத கற்பனை பயத்தை ஏற்படுத்தி வெஜைனிஸ்மஸ் நிலைக்குத் தள்ளிவிட்டது. இந்த உளவியல் உண்மை தெரியாத கணவன், ‘அவள் உடல் உறவுக்கு ஏனோ மறுக்கிறாள்’ என்று எண்ணிக்கொண்டு சகட்டுமேனிக்குத் திட்ட,  அவள் மேலும் பதற்றமாகி இருக்கிறாள்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன? இந்தப் பெண்ணுக்கு சிஸ்டமேட்டிக் டிசென்சிடிசேஷன் (Systematic Desensitization)  என்ற பிஹேவியரல் தெரபி கொடுக்க வேண்டும்.
புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் புரிந்துகொள்ள வேண்டியது:
முதல் முறை கூடும்போது ஒவ்வொரு கணவனும், ‘இவன் அவசரப்பட மாட்டான், முரட்டுத்தனமாக நடந்துகொள்ள மாட்டான், வலிக்குது என்றால் உறவைத் தள்ளிப்போடுவான், அனுசரணையாக நடந்துகொள்வான்’ என்கிற நம்பிக்கையை மனைவியின் மனதில் விதைப்பதுமாதிரி நடந்துகொள்ள வேண்டும்.
செக்ஸ் நடவடிக்கை நடைபெறவில்லை என்றால், கணவனும் மனைவியும் தவறாகப் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பிப்பார்கள். இதனால் உண்மையில் என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அடுத்து அந்தப் பெண்ணின் உணர்வில் அது ஆழமாகப் பதிந்து, அந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகலாம்.
மனைவி ரிலாக்ஸ் ஆக கணவன் வாய்ப்பு தர வேண்டும். செக்ஸ் என்பது ஈஸியானது என்பதுமாதிரி பேச்சும் நடவடிக்கையும் இருக்க வேண்டும். ஒரு பெண்ணை மிகவும் ரிலாக்ஸ் ஆக வைத்து, அவளைப் பதமான நிலைக்குக் கொண்டுவந்து பின்பு அனுபவிக்க ஆரம்பித்தால், அதில் கிடைக்கும் இன்பத்தின் தித்திப்பு கூடுதல்தான்.  பலவந்தம் எப்போதுமே முழுமையான திருப்தியைத் தராது.
பெற்றோரும் பெரியோரும் கூடலைப்பற்றி பயம் காட்டாமல், சந்தோஷமான வார்த்தைகளைச் சொல்லித்தர வேண்டும். வெஜைனிஸ்மஸ் என்பது மனப் பிரச்னையால் ஏற்படும் உடல் பிரச்னை என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்!

No comments: