Saturday, July 21, 2012


பிக்சட் டெபாசிட்: 5 ஆலோசனைகள்


வங்கியில் `பிக்சட் டெபாசிட்’ செய்யும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் இவற்றைப் படியுங்கள்…
1. பிக்சட் டெபாசிட் பாதுகாப்பு
நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் எந்த நிதி நிறுவனத்தைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. அதேவேளையில் வங்கிகளைப் பொறுத்தவரை, ஒரு வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு டெபாசிட் இன்சூரன்ஸும், கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனும் காப்பீடு அளிக்கின்றன. எனவே நீங்கள் ரூ. 3 லட்சம் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், அதை வெவ்வேறு வங்கிகளில் 3, 4 முதலீடுகளாகப் பிரித்துச் செய்யுங்கள். அது உங்கள் பணத்துக்குப் பாதுகாப்பாக அமைவதோடு, அவசரமாகப் பணம் தேவைப்பட்டால் மொத்த டெபாசிட்டையும் உடைக்க வேண்டியிராது.
உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் தொகையை மட்டும் `பிரிமெச்சூர் வித்டிராவல் பெனால்டி’ தொகை செலுத்திப் பெறலாம். மற்ற டெபாசிட்கள் அதுபாட்டுக்கு வளர்ந்துகொண்டிருக்கும்.
2. `டெபாசிட் ஏணி’
உங்கள் பணத்தை பல்லாண்டு காலத்துக்கு குறைவான வட்டி விகிதத்துக்கு முடக்கிப் போடும் அபாயத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? வட்டி விகிதங்கள் பல்லாண்டு கால சுழற்சியில் நகரும் என்பதால், பிக்சட் டெபாசிட்கள் நிலையற்ற தன்மைக்கு உள்ளாகக் கூடியவை. இதைத் தவிர்க்க, பல்வேறு காலகட்ட அளவு கொண்ட `பிக்சட் டெபாசிட் ஏணி’யை உருவாக்குங்கள். உதாரணமாக நீங்கள் ரூ. 4 லட்சம் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், அதை தலா ஒரு லட்சமாகப் பிரித்து, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஆண்டு கால அளவுகளுக்கு டெபாசிட் செய்யுங்கள். ஓராண்டு டெபாசிட் தொகை முதிர்வடையும்போது, அதை நான்காண்டு டெபாசிட்டில் மறுமுதலீடு செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு வட்டி விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் நீங்கள் `பாலன்ஸ்’ செய்துகொள்ளலாம்.
3. முன்னதாகப் பணத்தைப் பெற்றால்…
பணத்தை நீண்டகாலத்துக்கு வங்கியில் போட்டுவைப்பதும், முதிர்வுக்கு முன் அதை எடுப்பதும் குறைவான `ரிட்டர்ன்’தான் கிடைக்கச் செய்யும். உங்கள் வங்கி, ஓராண்டு டெபாசிட்டுக்கு 9 சதவீத வட்டியும், 5 ஆண்டுகாலத்துக்கு 9.5 சதவீத வட்டியும் வழங்குகிறது என்றால், உங்களுக்கு முன்னதாகப் பணம் தேவைப்படலாம் என்ற நிலையில், நீண்ட காலத்துக்கு ஆசைப்படாதீர்கள்.
நீங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலீடு செய்து, ஓராண்டுக்குப் பின் அதை உடைக்கிறீர்கள் என்றால், ஓராண்டு டெபாசிட்டுக்கு உரிய வட்டி விகிதம்தான் உங்களுக்குக் கிடைக்கும். அத்துடன், முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கான அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்பதால், ரிட்டர்னில் அது ஒரு சதவீதம் அளவுக்குப் பாதிக்கும்.
4. டி.டி.எஸ்.
பிக்சட் டெபாசிட் மூலம் பெறப்படும் வட்டிக்கு முழுமையாக வருமான வரி உண்டு. வட்டித் தொகை ஓராண்டுக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு மேலே போனால், அந்தத் தொகையை நீங்கள் பெறுவதற்கு முன்பே வங்கியானது 10.3 சதவீத வரியைக் கழித்துக்கொள்ளும். அத்துடன் முடிந்துவிடுவதில்லை. உங்களின் வருடாந்திர வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் என்றால், இந்த வருவாயில் கூடுதல் தொகையை வரியாகச் செலுத்த வேண்டும்.
டி.டி.எஸ். தொகை பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், பிக்சட் டெபாசிட்கள், பத்திரங்கள் மூலமான வருமானம் குறித்து வருமான வரிக் கணக்கில் நீங்கள் தெரிவிக்க வேண்டும். வட்டிக்கான வரியானது பணம் சேரும் அளவு அடிப்படையில் கணக்கிடப்படும்.
5. குடும்பத்தினர் பெயரில் முதலீடு செய்தாலும்…
நீங்கள் உங்கள் மனைவி அல்லது கணவர், குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்தாலும் உங்களால் வரியைத் தவிர்க்க முடியாது. நீங்கள் உங்கள் மனைவி அல்லது குழந்தைக்குக் கொடுக்கும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றாலும், அத்தொகை முதலீடு செய்யப்படும்போது அதன் மூலமë கிடைக்கும் வருமானம், பணம் கொடுத்தவரின் வருவாயுடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும். எனவே ஒருவர் தனது மனைவி பெயரில் பிக்சட் டெபாசிட்களில் பணம் போடுகிறார் என்றால், கிடைக்கும் வட்டியானது கணவரின் வருமானமாகக் கருதப்படும்.
வயதுக்கு வராத குழந்தைகளின் பெயரில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளைப் பொறுத்தவரை விதி கொஞ்சம் மாறுபடுகிறது. அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருமானம், பெற்றோரின் வருவாயாகக் கருதப்படும்.

No comments: