Sunday, July 15, 2012


வெள்ளை படுதல்

வெள்ளை படுதல்
எப்படித்தான் தோன்றுகிறது?

எச்சரிக்கையும் தீர்வும்.
சித்த வைத்திய நிபுணர் பார்த்தசாரதி


அந்தப் பெண்மணியை என்னிடம் கொண்டு வந்து நிறுத்தி, அவரின் மகள் கேட்ட முதல் கேள்வி, ‘‘எங்கம்மா உயிர் பிழைப்பாங்களா டாக்டர்?’’ என்பதுதான். கேள்வியால் அதிர்ச்சியுற்ற நான், அந்தப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தேன். ஒட்டடைக்குச்சி போன்று உடல் மெலிந்து காணப்பட்டார். கண்கள் சொருகி மயக்கநிலையில் நின்றுகொண்டிருந்தார். பெட்டில் அவரை படுக்க வைத்துவிட்டு நாடித்துடிப்பை முதலில் பரிசோதித்தேன். ‘என்ன பிரச்னை?’ என்று கேட்டபோது, மகள் ‘ஓ’வென்று அழத் தொடங்கிவிட்டார். சற்று நேரம் கழித்து அவரே சமாதானமாகி, ‘‘எங்கம்மாவுக்கு ரொம்ப நாளாவே வெள்ளைப்படுற பிரச்னை இருக்கு. கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில காட்டிட்டிருந்தோம். ‘அது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்ல... எல்லாம் சரியாயிடும்’னு அப்பப்போ மருந்து தருவாங்க. நேத்திக்கு என்னடான்னா அம்மா நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. கொண்டுட்டு ஓடினேன். சோதிச்சுப் பார்த்தவங்க, ‘உங்கம்மாவுக்கு வியாதி முத்திப்போச்சு. இனி அவங்க பொழைக்கிறது கஷ்டம்தான்’னு சொல்லி கொண்டு போகச் சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நீங்கதான் டாக்டர் எங்கம்மாவை காப்பாத்தணும். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க’’ என்று கூறினார்.

நான் நோயாளியைத் தீவிரமாக பரிசோதிக்கத் தொடங்கினேன். அலோபதி மருத்துவர்கள் கூறியதுபோல் அவருக்கு வெள்ளைபடுதல் முற்றிப்போயிருந்தது. அதாவது வெள்ளைபடுதல் முற்றி, வெட்டை நிலைக்கு அவர் வந்திருந்தார். ஆனால், உரிய சரியான சித்த மருத்துவ சிகிச்சையளித்தால் அவர் பிழைத்துவிடுவார் என்று எனக்குத் தோன்றியது. தாமதமின்றி உடனே சிகிச்சையை ஆரம்பித்தேன்.

சிலாசித்து பற்பத்தை வெண்ணெயுடன் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தேன். தென்னம்பாலை இடித்துச் சாறு பிழிந்து அதனையும் உள்ளுக்குக் கொடுத்தேன். அன்னபேதி செந்து}ரத்தை ஒரு சிட்டிகை தேனுடன் கலந்து கொடுத்தேன். துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த அவரது பிறப்புறுப்பை சுத்தப்படுத்தி, ஆமணக்கு எண்ணெயில் நனைத்த சிறுபஞ்சை பிறப்புறுப்பில் துணி வைத்துக் கட்டப் பணித்தேன். இதனைத் தொடர்ந்து அன்று முழுக்க எனது கண்காணிப்பிலேயே வைத்திருந்து சிகிச்சை செய்தேன். மறுநாள் அவரை வீட்டுக்கு அனுப்பி, சிலாசித்து பற்பத்தை காலை, மதியம், இரவு என மூன்று மாதங்களும், தென்னம்பாலைச் சாறு வாரம் ஒரு குவளை, தினமும் இரண்டு இளநீர் என மூன்று மாதங்களும், ஆமணக்கு எண்ணெயில் சிறுபஞ்சை நனைத்து மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பிறப்புறுப்பில் துணிவைத்துத் தொடர்ந்து கட்டி வருமாறும், அன்னபேதி செந்து}ரத்தை காலை, மாலை ஒரு சிட்டிகை தேனுடன் மூன்று மாதங்களும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி அனுப்பினேன். கூடவே, உடலுக்கு சூடு தரக்கூடிய உணவை தவிர்த்து குளிர்ச்சி தரும் உணவு முறையைக் கையாளுமாறு கூறினேன்.

அடுத்த ஒருவாரத்தில் அந்தப் பெண், தனது தாயாருடன் மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். இறந்துவிடுவார் என்று கூறப்பட்ட அந்தப் பெண்மணியிடம் இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள். முகத்தில் தெளிவு தெரிந்தது. மகளின் உதவியின்றி மெதுமெதுவாக தானே நடந்து வந்தார். உடல் மெலிவு சற்று சரியாகியிருந்தது. அன்னபேதி செந்து}ரத்தின் விளைவால் உடலில் இரத்த விருத்தி ஏற்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து சிகிச்சையை தொடரச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அடுத்த மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் நான் க்ளினிக்கில் இருந்தபோது திடீரென்று எனக்கு போன். பேசியது அந்தப் பெண்தான். ‘‘டாக்டர், உங்களைப் பார்க்க வரலாமா? அம்மா உங்களை சந்திக்க வேண்டும் என்கிறார்’’ என்று கேட்டார். வரச்சொல்லி காத்திருந்தேன். தனது தாயாருடன் அந்தப் பெண் வந்தார். எனக்கு ஆச்சர்யம். அன்றைக்கு பார்த்தவர்தானா இந்தப் பெண்மணி என்று. நல்ல மாற்றங்களுடன் நிறைவான பெண்மணியாகக் காட்சியளித்தார். ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்றேன். ‘‘எனது உடல் சூடு முற்றிலும் தணிந்துவிட்டது. வெள்ளைப்போக்கும் முழுமையாக நின்றுவிட்டது. நான் உங்களிடம் வந்து சிகிச்சை பெற்றது உட்பட எதுவுமே எனக்கு அந்தளவுக்கு நினைவில் இல்லை. அவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போது உங்களால் பூரணமாக குணமடைந்துவிட்டேன். என்றாலும், மீண்டும் வெள்ளைப்போக்கு என்னைத் தாக்காமலிருக்க நான் என்ன செய்ய வேண்டும் டாக்டர்? மேலும் வெள்ளைப்போக்கு பற்றி எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்’’ என்றார். அவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியை பாராட்டியபடி வெள்ளைப்போக்கு குறித்து இருவருக்கும் கூற ஆரம்பித்தேன்...

‘‘பொதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... வெள்ளைப்படுதல் என்பது பரம்பரை நோயல்ல... தாய்க்கு வந்தால் மகளுக்கும் வருவதற்கு. அது உஷ்ணம் என்னும் வெட்டைச் சூட்டால் ஏற்படுவது. உங்களுக்கு இருப்பது போலவே உங்கள் மகளுக்கும் சூட்டாு உடம்பாக இயற்கையிலேயே இருந்தால், அவருக்கும் வெள்ளைப்படுதல் வருவதற்கு வாய்ப்புண்டு. மற்றபடி அம்மாவுக்கு, பாட்டிக்கு இருப்பதாலேயே மகளுக்கு வரும் என்பதெல்லாம் இல்லை’’ என்று நான் கூறிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்மணியின் மகள் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். ‘‘அப்போ வெள்ளைப்படுறது எப்படித்தான் தோன்றுகிறது டாக்டர்?’’

‘‘பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பி அதிகரித்து விடுவதால் உஷ்ணம் ஏற்பட்டு, கருப்பையின் வாய்ப் பகுதியில் பெண்களுக்குக் கட்டிகள், புண்கள் மற்றும் சதைகள் தோன்றுகின்றன. வெள்ளைப்படுதல் ஏற்பட இதுதான் முக்கிய காரணமாகிறது. கருப்பையில் ஏற்படும் பால்வினை நோய்க் கிருமிகளின் தொற்று, கருப்பை இடம் விட்டு இடம் மாறல், இரத்தக் குறைவு, கருப்பை பலவீனம், வீக்கம், முறையற்ற புணர்ச்சி முறையால் கருப்பை தாபிதம், அடிக்கடி பிள்ளைப்பேறு, மனக்கவலை, கடின வேலை, மிகுதியான உடலுறவு போன்றவைகளினால் கூட பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்பட்டு பெரும் வேதனை தருகிறது.

சினைப்பையிலிருந்து சினை முட்டை கருப்பை நோக்கிப் போகும்போதும் உடலுறவின் உச்ச நேரத்திலும்கூட இந்த வெள்ளைப்படுதல் ஏற்படும். சிலருக்கு மாதவிலக்கிற்கு முன்பாக இது கூடுதலாக இருக்கும். மாதவிலக்கு வருவதற்கான அறிகுறியாக இது தென்படும். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இந்த வெள்ளைப்படுதல் நோய் உண்டாகும். மாதவிலக்கு தோன்றி 8 தினங்களுக்குப் பின்புகூட சிலருக்கு இந்நோய் ஏற்படுவதுண்டு.’’

‘‘டாக்டர், வெள்ளைப்படுதலில் வகைகள் உண்டா? எனக்கு ஏற்பட்டது எந்த மாதிரியான வெள்ளைப்போக்கு?’’ என்றார் அந்தப் பெண்மணி.

‘‘வெள்ளைப்படுதலில் பெண்களுக்குப் பெண்கள் வித்தியாசம் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிலருக்கும், பச்சை நிறமாக ரத்தத்துடனும் சிலருக்கு வெள்ளைப்படுதல் வெளியேறும். சிலருக்கு நிணநீருடன் ரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் வெளிவரும். உங்களுக்கு ஏற்பட்டது முற்றுவதற்கு முந்தைய நிலை வெள்ளைப்படுதல். இன்னும் கொஞ்ச காலம் கவனிக்காது விட்டிருந்தாலும், அது உங்களை பிறப்புறுப்பு புற்றுநோயில் கொண்டு போய் தள்ளியிருக்கும். வெள்ளைப்படுதலின்போதே பெண்கள் உஷாராகிவிட வேண்டும். குறைந்தபட்சம் துர்நாற்றம் ஏற்படும்போதாவது கவனித்தாக வேண்டும். இல்லையெனில் வெள்ளைப்படுதல் மோசமான விளைவுகளை பெண்களிடம் ஏற்படுத்திவிடும். பிறப்புறுப்பின் செல்களை அழிக்கும். கருப்பை உட்பகுதியில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். கருச்சிதைவை உண்டாக்கும். நுண்ணுயிர்த் தாக்குதலை ஏற்படுத்தும். இறுதிக் கட்டத்தில் புற்றுநோயை உண்டாக்கி ஆளையே காலி செய்துவிடும்.’’

இருவரின் முகத்திலும் அதிர்ச்சி தென்பட்டது. பயந்துகொண்டே மகள் கேட்டார். ‘‘வெள்ளைப்படுறது ஒருத்தர்கிட்டருந்து இன்னொருத்தருக்குப் பரவுமா டாக்டர்?’’

‘‘சாதாரணமாகப் பரவாது. ஆனால், வெள்ளைப்படுதல் உள்ள பெண்களின் பேண்ட்டீஸ், பாவாடை போன்றவற்றை அடுத்த பெண்கள் அணிய நேரும்போது அவர்களுக்கு இது தொற்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அதேபோல், வெள்ளைப்படுதல் உள்ள பெண்ணைப் புணரும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பிடரி ஜன்னி என்னும் நோயால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.’’

பிரமிப்பு விலகாத முகத்தோடு அந்தப் பெண்மணி கேட்டார்... ‘‘வெள்ளைப்படுதலை சித்த வைத்தியத்தின் மூலம் ஆரம்பத்திலேயே எப்படி எளிதாக குணப்படுத்தலாம் டாக்டர்?’’

‘‘இந்நோயை விரட்டுவது மிகவும் சுலபமான ஒன்றுதான். ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டறிந்து மருத்துவம் பார்த்தால் குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால், நம் பெண்கள் வெட்கப்பட்டுக்கொண்டு இப்பிரச்னை குறித்து வெளியே சொல்வதில்லை. முற்றிய பிறகுதான் முனகுகிறார்கள். சித்த மருத்துவத்தில் இதற்கென ஏராள மருந்துகள் உள்ளன. உலர்ந்த மணத்தக்காளி சாறெடுத்து பசும்பாலில் கலந்து குடிக்கலாம். வெள்ளை கல்யாணப் பூசணியை சமைத்துச் சாப்பிடலாம். செம்பருத்தி இலைக் கொழுந்தை பாலில் அரைத்துச் சாப்பிட இந்நோய் விலகும். கருவேலம் கொழுந்தையும் அரைத்துச் சாப்பிடலாம். கொன்றைப் பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தலாம். புளியங்கொட்டை தோலைப் பொடிசெய்து தேன் சேர்த்துப் பருகலாம். இதெல்லாம் வெள்ளைப்படுதலுக்கான எளிய சித்தவைத்திய முறைகள். வெள்ளைப்படுதலின் அளவு, நோயாளியின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு வைத்திய முறைகள் மாறும்’’ என்றேன். 

No comments: