எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?...
பெண்களில் மலடு என்கிற ஒரு விஷயமே கிடையாது
குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.. எல்லா விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை இல்லையா? அதுபோலத்தான் எல்லா தம்பதிகளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்பார்ப்பது போல நடந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது.
இன்றும் சரி, அன்றும் சரி... திருமணமான தம்பதிகளுக்கு அவர்களுடைய குடும்பங்கள் கொடுக்கும் அதிகப்படியான அவகாசம் மூன்று மாதங்கள்தான். அதன் பிறகு ‘இன்னும் உண்டாகலையா..?’ என்கிற கேள்விகளால் அந்தத் தம்பதியை அரித்தெடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்களுடைய உறவினர்களும் நண்பர்கள் வட்டமும்.
அதிலும் ஆண் இந்த விஷயத்திலிருந்து பெரும்பாலும் தப்பிவிடுவார். அவரிடம் இந்தக் கேள்வி பெரும்பாலும் நேரிடையாகக் கேட்கப்படுவதில்லை. பெண்கள்தான் மொத்தத் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள். கொஞ்ச நாட்களிலேயே அவளுக்கு சமூகம் ‘மலடி’ என்கிற ஒரு பட்டத்தையும் வழங்கிவிடுகிறது.
நாம் முதலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களில் மலடு என்கிற ஒரு விஷயமே கிடையாது தெரியுமா? தம்பதிகள் இருவரும் சரியானபடி, சரியான நேரத்தில் உறவு வைத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் சரியானபடி டீரிட்மெண்ட் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் குழந்தை உண்டாகாமல் இருந்திருக்கலாமே ஒழிய, மலட்டுத் தன்மை (Infertility) என்பது பெண்ணில் கிடையாது. அவர்களில் subfertile, அதாவது வளர்ச்சி குறைந்தநிலைதான் ஏற்பட்டிருக்கலாமே ஒழிய வேறு காரணங்கள் இருப்பதற்குச் சாத்தியமில்லை.
திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 _40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20_25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்னைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15_20% வரை பிரச்னைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.
எது எப்படியோ.... திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை உண்டாகாமல் இருந்தால்தான் தம்பதிகளில் யாருக்கேனும் பிரச்னை இருக்கமுடியும் என்று நம்மால் சொல்லமுடியும். குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே பிரச்னை உள்ளது என்றெல்லாம் கண்மூடித்தனமாகச் சொல்லிவிட முடியாது.
ஒவ்வொரு தம்பதிக்கும் அவரவர் சூழல் வேறுபடும். சிலர் முப்பது வயது போல திருமணம் முடித்திருக்கலாம். இவர்களுக்கு குழந்தை விஷயம் தள்ளிப்போனால் இரண்டு மூன்று வருடம் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. இது உடனே கவனிக்கப்படவேண்டிய விஷயமாகிவிடும்.
சிலருக்கு இருபத்தியிரண்டு, இருபத்துமூன்று வயதிலேயே திருமணமாகலாம். ஆனால் குடும்பத்தாரின் நச்சரிப்பு இந்தத் தம்பதிக்கு அதிகமாக இருக்கும். வயது காரணமாக இவர்கள் இன்னும் சில காலம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றாலும், குடும்பக் கட்டாயத்தின் பேரில் அவர்கள் உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பித்துவிட நேரலாம். அதனால் சூழல் என்பது அவரவர்க்கு ஏற்றபடி மாறுபடும். அவரவருடைய குடும்பச்சூழல் மற்றும் தேவைப்படி மருத்துவர்கள் ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பார்கள்.
பொதுவாக டிரீட்மெண்டுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகளில், நூறு பேரில் எண்பத்தைந்து சதவீதம் பேர் வரை எந்த விதமான மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தாமலேயே கருதரித்து விடுவார்கள். மீதமுள்ளவர்களுக்குத்தான் மருத்துவர்களான எங்கள் உதவி முழுமையாகத் தேவைப்படும்.
பிரச்னையுடன் வருபவர்கள் பெரும்பாலும் அம்மா _பெண் அல்லது மாமியார் _ மருமகள் என்று வருவதுண்டு. பிரச்னையுள்ளவர்கள் இப்படி வருவது தவறு. தம்பதிகளாக வரும்போதுதான் பிரச்னையை இரண்டு கோணங்களிலும் அலசித் தீர்வு காணமுடியும். இதில் மாமியார்களுக்கும் அம்மாக்களுக்கும் இடமில்லை. தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்னைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.
எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?...
சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம்.
முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும் என்று சொல்லி இருக்கிறேன். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.
கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம்.
சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம். அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்னைகள் ஏற்படுத்தலாம்.
சில குடும்பங்களில் கூட்டுக் குடும்பமாக இருப்பார்கள். அதுபோன்ற சூழலில் தம்பதியரின் நெருக்கம் சற்றே குறைய வாய்ப்புள்ளது. அதனாலும் குழந்தைபேறு தள்ளிப் போகலாம்.
சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருதரிப்பு தள்ளிப் போகலாம்.
இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்னைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்னைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணலாம்.
No comments:
Post a Comment