`சூயிங்கம்’ மென்றால் ஞாபக மறதி!
சிலருக்கு எந்நேரமும் `சூயிங்கம்’மை சவைத்துக் கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப்பழக்கம், ஞாபகசக்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.
இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்டிப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சூயிங்கம் பழக்கம் இல்லாதவர்களைவிட, சூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துகளையும், எண்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில் அதிகக் கஷ்டப்படுகின்றனர் என்கிறார்கள்.
சூயிங்கம்மை மெல்லும்போது ஏற்படும் அசைவு, தொடர்ச்சியான விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் மூளையின் திறனைப் பாதித்திருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
கை, கால் விரல்களை நொடிப்பது போன்று சூயிங்கம் மெல்லும் தொடர்ச்சியான செயல், நம்முடைய குறுகிய கால ஞாபகத்திறனில் குறுக்கிட்டு அதைப் பாதிக்கிறதாம்.
சூயிங்கம், குறிப்பாக குறிப்பிட்ட சுவை சேர்ந்த சூயிங்கம் ஒருவரின் திறனைக் கூட்டும், மூளைத் திறனை ஊக்குவிக்கும் என்று முன்பு கூறப்பட்டதற்கு எதிராக தற்போதைய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் மனிதர்கள் சொதப்பக்கூடியவர்கள் என்றும் மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.
ஆய்வாளர்களில் ஒருவரான கார்டிப் பல்கலைக்கழகத்தின் மிச்சைல் கோஸ்லோவ், “மூளைக்கு ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம், கவனக் குவிப்புக்கு சூயிங்கம் உதவுகிறது என்று முன்பு சில ஆய்வுகள் வாதிட்டன.
ஆனால், வார்த்தைகள் சார்ந்த ஞாபகத்திறனில், சூயிங்கம் போன்ற பகுதிச் செயல்பாடுகள் குறுக்கிட்டுப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம்” என்று உறுதிபடக் கூறுகிறார்.
No comments:
Post a Comment