உலகம் அழிவை நோக்கி - மாயன் கலண்டர்!
எதிர்வரும் 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் மாயன் நாள்காட்டி
தனது நீண்ட காலத்துப் பயணத்தினை முடித்துக் கொள்கின்றது, இதன் மூலம்
மக்களிடம் பரவலான பல கருத்துக்கள் நிலவி வருகின்றன, அவற்றில் முதன்மையானது
2012 டிசம்பர் 21 காலை 11 மணி 11 நிமிடம் 11 விநாடியுடன் உலகம் அழிவை
நெருங்குகின்றது என்பதாகும்.
கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா என்ற ஓர் இனம்
இருந்தது. 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில்
அழிந்தது. இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாக
சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான
சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்துக்
கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர்.
இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர்.
இந்தக் காலண்டர் கிமு 313ல் தொடங்கியது. இதன்படி டிசம்பர் 2012ன் 21ம்
தேதியுடன் முடிவடைகிறது. அதனால் உலகம் அந்தத் தேதியுடன் முடிவடையும் என்று
அவர்கள் ஞானதிருஷ்டியால்
உணர்ந்து முற்றுப்புள்ளி வைத்ததாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது சூரிய
மண்டலத்திற்கு 7நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,625 வருடங்களாம். இதனை
மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு கால கட்டமும் 5125
வருடங்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி 4 கால கட்டங்கள் முடிவடைந்து
இப்போது 5வது காலகட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த நாட்காட்டி
21.12.2012ல் முடிவடைகிறது. அதன்படி 21.12.2012ல் உலகு அழியும் என்று ஒரு
சாரார் நம்புகிறார்கள்.
நாட்காட்டி முடிவடைந்ததே தவிர 2012 ல் உலகம் அழியும் என்று மாயன் இனம்
எங்கும் சொல்லவில்லை. அவர்கள் தனது இனத்தின்
அழிவைப் பற்றியே கூடச் சொல்லவில்லை. அது அவர்களின் கணக்குபடியான யுக
மாற்றத்திற்க்காகவே இருக்கும். இயற்கைப் பேரழிவுகள் உலகம் தொடங்கிய
காலந்தொட்டு நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. சுனாமியும் கூட அப்படி
ஒன்றுதான்.மக்களின் இந்த பயத்தை சினிமா உலகம் பயன்படுத்திக் கொண்டது.
உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான நாஸ்டர்டாமஸ் என்பவர் (1503 – 1566)
எப்போது ஏப்ரல் மாத வெள்ளிக்கிழமை 25ம் தேதி வருமோ அன்று உலகம் அழியும் என
எழுதியே வைத்துள்ளார். பின்பாக 1666, 1734, 1886 மற்றும் 1943 ஆகிய
வருடங்களில் ஏப்ரல் 25ம் தேதி வெள்ளிக்கிழமை வந்தது.
இதனைப்போலவே கிரீஸ்வெல், ஜூனேலி ரோயர் போன்ற பல தீர்க்கத்தரிசிகள் உலகம்
அழியும் என்று கணித்து சொன்ன வாக்குகள் பொய்த்தே இருக்கின்றன. லண்டன் வான
சாஸ்திரக் குழு ஒன்றும் 1523ம் ஆண்டில் கணித்த கணிப்பின்படி 1.2.1524
பெரும் வெள்ளத்தால் லண்டன் மாநகரம் அழியும் எனச் சொல்லியது. ஆனால்
அத்தேதியில் ஒரு மழைகூடப் பெய்யவில்லை. ஜெர்மனியில் ஜோஹன்னஸ் ஸ்டஃப்ன எனும்
கணிதமேதையும் இப்படித்தான் வெள்ள அபாயத்தால் ஜெர்மனி நகரம் அழியும்
என்றார். அன்று பயங்கரமான மழையும் அவர் சொன்னதைப்போல பெய்தது. ஆனால் அவர்
சொன்னது போன்ற பிரம்மாண்ட அழிவு ஏதும் நிகழவில்லை
செய்தி
கவுதமாலா நாட்டில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான மாயன்
மன்னரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாயன் நாகரிகம், மத்திய மற்றும் வடக்கு அமெரிக்க பகுதிகளில்
பரவியிருந்தது. மாயன் அரசர்கள், மக்களால் கடவுள்போல கருதப்பட்டனர். கிபி
250 முதல் 900 வரை இவர்களது காலம் ஆகும். பிரவுன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த
ஸ்டீபன் ஹூஸ்டன் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள், கவுதமாலா நாட்டில்
அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர்.
அப்போது 1600 ஆண்டு பழமையான, மாயன் மன்னரின் கல்லறை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 6 குழந்தைகளின்
எலும்புக்கூடுகளும், பீங்கான், துணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள்,மாயன் மன்னர் பயன்படுத்தியதாக
இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
குழந்தைகள், மாயன் அரசன் இறந்தபோது அவனுக்காக பலி கொடுக்கப்பட்டவர்களாக
இருக்கலாம் என கூறப்படுகிறது. இது, கிபி 350 - 400க்கு இடைப்பட்ட காலத்தில்
வாழ்ந்த மாயன் மன்னரின் கல்லறையாக இருக்கலாம் என தெரிகிறது. கல்லறையில்
குடைந்தும்,
செதுக்கியும் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. கல்லறையில் இருந்து
எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதன் மூலம்
மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மாயன் கலாச்சாரம்
ஐரோப்பிய ஏகாதிபத்திய துப்பாக்கிகளுக்குத் தப்பிய வட மற்றும் தென் அமெரிக்க
பூர்வகுடியினங்கள் வெகு சிலவே. இம்மக்களின் கலாச்சாரமும் வரலாறும்
நான்கைந்து நூற்றாண்டுகளில் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மனிதாபிமானமற்ற
முறையில் அழிக்கப்பட்டு விட்டன.
'த மோட்டார் சைக்கிள் டயரி' எனும் படத்தில் 'மாயன்' அமெரிக்கப்
பூர்வகுடியினரின் அழிந்துபோன பிரம்மாண்டமான நகரங்களையும் பெரும் பெரும்
கட்டிடங்களையும் காணலாம்.
தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாதிமாலா, ஹூந்துராஸ் போன்ற நாடுகள்
விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் கிமு 2600 வாக்கில் மாயன்
நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற
துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை
மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.மு.150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை
அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது.
ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச்
சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு
காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில்சுமார் 6
இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்திமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக
அறியப்படுகிறது.
மாயன் கணிதம்
20 அடிமான எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத்திறமைக்கு
சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக
வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம்
பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள்
எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட
எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையை கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு '_'
மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு
நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
கீழ்க்காணும் படத்தில் மாயன் குறியீட்டு முறையில் எண்களைக் காணலாம்.
பெரிய எண்களைக் குறிப்பிடும் முறை
கூட்டல் முறை
மாயன் கட்டிடக் கலை
அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக் கலையில் மிகச் சிறந்து
விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொல்லப்படுகிறது. நவீன வரலாறு தொல்லியல்
மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் காலாச்சாரத்தில் ஆர்வம்
ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும்
பங்காற்றியிருக்கின்றன.
ஏனைய தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள்
மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான
இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக
நுனுக்கமான
வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக்
காணலாம்.
மாயன் வானியல்
மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை
பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன் மற்றும் சுக்கிரன்
போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர்.
சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மானிக்கும்
அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த
மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியொட்டியே சட்ங்குகளை நடத்தினர்.
ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான
ஆதாரங்கள் பெறப்படுகின்றன.
மாயன் நம்பிக்கைகள்:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு
வினோதமான மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு
ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும்
ஒரு சடங்கை நடத்துவர். இச் சடங்கின் போது அரசன் தன் ஆண்குறியை கீறி அதில்
வரும் இரத்தத்தை எடுத்து கூடியிருக்கும் மக்களிடம் காணிபித்து பின்
கடவுளிடம் பேசி அதன் அலோசனையை மக்களிடம் கூறுவானாம். அதன் பின் அவனது
அடிமைகளில் ஒருவரை பலியிடுவார்களாம். அந்த அடிமைகள் பெரும்பாலும் போரில்
தோற்ற அண்டை நாட்டு அரசர்களாக இருப்பார்களாம்.
இலக்கியம்:
ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள்
பயன்படுத்தினர்.கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது
மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள்
பயன்படுத்தி வந்தனர்.
இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஸ்பானிய ஏகதிபத்தியத்துடன் வந்த அடிப்படை வாத கிறிஸ்தவர்கள் பல மாயன்
நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.
வீழ்ச்சி
இவ்வளவு வளத்துடன் ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல்
பூண்டில்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும்
அறுதியிட்டுக் கூறவில்லை.இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில்
முக்கியமானது, அண்டை
நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து
அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய
குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான
மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம்
தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா
போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் நிலைமை பின்தங்கிய
நிலையிலே உள்ளது.
No comments:
Post a Comment