டெங்கு காய்ச்சல் அறிந்ததும் அறியாததும்..
வணக்கம்
தமிழ் நெஞ்சங்களே. எடக்கு மடக்கு தளத்தில் இன்றைய பதிவாய் கடந்த வாரத்தில்
தமிழகத்தினை உலுக்கி எடுத்த டெங்கு காய்ச்சல் பற்றியும் அதற்கான அறிகுறிகள்
மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும்
பார்க்கலாம். புரியாத பல மருத்துவ சொற்களை அழகிய தமிழிலும் மொழிபெயர்த்து
கட்டுரையை எழுத உதவிய அன்பிற்கினிய நண்பர் திரு. ஜான் ஆப்ரஹாம் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றிகள்.
டெங்கு காய்ச்சல், ஆர்த்ரோபோட்
என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. உடல் வலி அல்லது மூட்டு வலி, தோலில்
சிவப்பு நிறத் தடிப்புகள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டை அணுக்களின்
எண்ணிக்கை குறைதல் மற்றும் நெறி கட்டுதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சல்,
மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. மிகத் தீவிரமான டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்பட்ட நோயாளியின் ரத்தத்தில் உள்ள புரோட்டீனை வெளியேற்றி
அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ”ஈடிஸ் ஈஜிப்டி”
என்ற கொசுவால் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. நகரப் பகுதிகளில்தான்
இந்தக் கொசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூடாமல் வைக்கப்பட்டிருக்கும்
அசுத்தமான தண்ணீரிலும், தேங்கி இருக்கும் அசுத்தமான மழை நீரிலும் இந்த கொசு
இனப்பெருக்கம் செய்கிறது.
இரண்டாவது முறையாக ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல், காம்ளிமெண்ட் என்ற சிஸ்டத்தை தூண்டுகிறது. இது ரத்த நாளத்தில் உள்ள எண்டோதீலியம் செல்களைத் தாக்கி ரத்தத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது. இதனால் ரத்தக்கசிவும் அதிகமாக ஏற்படுகின்றது. இந்தக்
காய்ச்சலால் சிறிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் உள்ள
நீர். உப்புகள், புரோட்டீன், சிவப்பு அணுக்கள் போன்றவை வெளியேறி
விடுகின்றன. இதனால் ரத்தம் கெட்டியாகி விடுகிறது. மேலும் உடலில் உள்ள
நீர்ச்சத்தும் குறைகிறது. இதயம் அதிகமாக வேலை செய்கிறது. திசுக்களுக்குச்
செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. உடலில் சோடியம் அளவு குறைந்து போகிறது.
மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதாலும், உணவுக் குழாயில் ரத்தம் கசிவதாலும்
சில சமயங்களில் இறப்பு எற்படலாம். இதயத்தில் உள்ள தடுப்புச் சுவர்களில்
ரத்தம் கசிதல், இதயச் சவ்வுகளில் ரத்தம் கசிதல் போன்றபாதிப்புகளும்
இருக்கும்.சில நேரங்களில் நுரையீரல், அட்ரீனல், ஈரல், மூளை ஆகியவற்றில்
ரத்தக் கசிவு ஏற்படும். ஈரல் வீக்கம் உண்டாகும்.
உடலுக்குள் டெங்கு வைரஸ்
கிருமிகள் நுழைந்த 1 – 7 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் ஏற்படும். அந்த
அறிகுறிகள், பாதிக்கப்பட்ட நபரின் வயதிற்கு ஏற்ப மாறுபடும். தொண்டை வலி,
மூக்கிலிருந்து நீர் கொட்டுதல், லேசான இருமல் உண்டாகும். காய்ச்சல், தலை
வலி, முதுகு வலி போன்றவை காய்ச்சலுக்கு முன் ஏற்படும். காய்ச்சல் ஏற்பட்ட
24 – 48 மணி நேரத்தில் உடல் முழுவதும் சிவப்பு நிறத் தடிப்புகள் உருவாகும்.
உடல் வலி, மூட்டு வலி ஏற்பட்டு அதன் தீவிரம் அதிகரிக்கும். குமட்டல்,
வாந்தி, நெறி கட்டுதல் மற்றும் பசியின்மை போன்றவை இருக்கும்.
டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சல்
இரண்டாவது முறையாக டெங்கு
வைரஸ் தாக்கும் போது இந்தப் பாதிப்பு ஏற்படலாம். முதல் தடவை இந்த வைரஸ்
தாக்கும்போது நோயாளியின் எதிர்ப்புச் சக்தியை தூண்டுகிறது. இரண்டாவது தடவை
தாக்கும்போது உடலில் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கிறது.
வைரஸ் தாக்கிய 4 முதல் 6
நாட்களுக்குப் பிறகு , முதல் நிலையாக காய்ச்சல், உடல் வலி, வாந்தி, தலைவலி,
பசியின்மை, இருமல் போன்றவை ஏற்படும். இரண்டாவது நிலையில் நோயாளி, கை,
கால்கள் சில்லிட்டுப் போகும். உடல் சூடாக இருக்கும். முகம் சிவந்து போகும்.
வியர்வை அதிகரிக்கும். பாதிக்கப் பட்ட குழந்தைகள் மிகவும் பரபரப்பாகவும்,
எரிச்சலுடனும் இருப்பார்கள். நெஞ்சுக்கு அடியில் வலி உண்டாகும்.
முன் நெற்றி மற்றும் கை,
கால்களில் கொசுக்கடி போன்ற சிறிய சிறிய ரத்தக் கசிவுகள் ஏற்படும். பெரிய
அளவில் ரத்தக் கசிவும் ஏற்படலாம். உடல் முழுவதும் சிவந்த மற்றும் சிவந்து
தடித்த புள்ளிகள் உண்டாகலாம். வாயைச் சுற்றியும், கை கால்களும் ஊதா
நிறத்தில் மாறலாம். குழந்தைகள் சிரமப்பட்டு மிக வேகமாக மூச்சு விடுவார்கள்.
நாடித்துடிப்பு வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருக்கும். ஈரல் வீங்கிப்
போகும்.
டெங்கு ஷாக் சின்ட்ரோம் என்ற நிலையில் உணவுக் குழாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தியும், மலம் கறுப்பாகவும் வெளியாகும்.டார்னிகுட்
பரிசோதனையில் 2.5 செ.மீ சதுரப் பரப்பில் 20-க்கும் மேற்பட்ட ரத்தப்
புள்ளிகள் இருந்தால், இந்த நோய் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள்
- சிறிய அளவில் ரத்தப் புள்ளிகள்
- பெரிய அளவில் ரத்தப் புள்ளிகள்
- மிகப்பெரிய ரத்தக் கசிவு
- மூக்கில் இருந்து ரத்தம் வடிதல்
- ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்
- ரத்த வாந்தி அல்லது மலம் கறுப்பாகவோ, ரத்தமாகவோ வருதல்.
- வெள்ளை அணுக்கள் தொடர்ந்து குறைவாக இருப்பது
- ரத்தம் உறைதலுக்குக் காரணமான தட்டை அணுக்கள் குறைதல்
- டார்னிகுட் பரிசோதனையில் ரத்தக் கசிவு தென்படுவது
- அசிடோஸிஸ்
- ரத்தம் கெட்டியாதல்
- ரத்தத்தில் ஈரல் என்ஸைம் அளவு அதிகரித்தல்.
- ரத்தத்தில் உள்ள புரோட்டீன் அளவு குறைவது
- ரத்தக் கசிவு நேரம் நீண்டு கொண்டே இருப்பது.
- நெஞ்சு எக்ஸ்ரேயில் நுரையீரல் ஜவ்வுகளுக்கு இடையில் நீர் காணப்படுவது.
- நோயாளிகளை ஒய்வில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
- காய்ச்சல் குறைய மாத்திரை மற்றும் வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியைப் பயன்படுத்தலாம்.
- எக்காரணம் கொண்டும் ஆஸ்பிரின் மருந்தைக் கொடுக்கக் கூடாது.
- வாந்தி, சாப்பிட முடியாமை, மிக அதிகமான வியர்வை, பேதி போன்றவை இருந்தால். வாய் வழியாக உப்பு – சர்க்கரைக் கரைசலைக் கொடுக்க வேண்டும்.
- நாடித் துடிப்பு, மூச்சு விடுதல், ரத்த அழுத்தம் மற்றும் நீர், உப்பு வெளியேற்றம் ஆகியவற்றை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
- ரத்தம் கெட்டியாகும் தன்மையை பரிசோதித்து அடிக்கடி அறிந்து கொள்ள வேண்டும்.
- உடல் ஊதா நிறமாக மாறினாலே, மூச்சு விட கஷ்டப்பட்டாலோ, ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.
- சிரை வழியாக சலைன் கொடுக்க வேண்டும்.
- ரத்தக் கசிவு ஏற்படும்போது புதிய ரத்தம் அல்லது தட்டை அணுக்கள் உள்ள பிளாஸ்மாவைக் கொடுக்கலாம்.
- மருந்து கொடுத்த பிறகும் சரியாகாவிட்டால் புதிய ரத்தம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment