Friday, June 15, 2012


மன்னிப்பு கேளுங்கள் மண வாழ்க்கை மணக்கும்!

பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை. தம்பதியரிடையே சின்ன சண்டை வந்தாலும் அதை ஊதி பெரிதாக்காமல் தவறு யார் மீது என்று கண்டறிந்து மனதார மன்னிப்பு கேட்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் வந்த சுவடு தெரியாமல் பிரச்சினை காணமல் போய்விடும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சொன்னதை செய்யலையா?

எங்காவது வெளியில் கூட்டிப்போகிறேன். சினிமாவுக்கு அழைத்துப்போகிறேன் என்று கூறிவிட்டு வேலைப்பளுவில் மறந்துவிட்டீர்களா? இது உங்கள் துணைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவே தவறாமல் மன்னிப்பு கேளுங்கள். உங்களின் சூழ்நிலையை அன்போடு புரிய வையுங்கள். வேலைப் பளுவின் எரிச்சலை மனைவி மீது காட்டினால் சண்டை மேலும் அதிகமாகும்.

வெறுப்பேற்றாதீர்கள்

சின்ன சின்ன தவறுக்கெல்லாம் எதையாவது குத்திக்காட்டி வெறுப்பேற்றாதீர்கள். இது தீர்க்க முடியாத சண்டையாக மாறிவிடும். தவறு எங்கு நிகழ்ந்தது என்பதை கண்டறிந்து அதை தீர்க்க முயல வேண்டும். தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவு செய்தபின்னர் காலம் தாழ்த்தாமல் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்

செயல்களால் உணர்த்துங்கள்

உங்கள் தவறை நீங்கள் உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் வெறும் வார்த்தையாக கேட்பதை விட செயலால் உணர்த்துங்கள். ப்ளீஸ் இனிமேல் அதுபோல் நடக்காது என்று சொல்வதை விட உங்கள் துணைக்கு பிடித்தமான சமையலை செய்து அசத்தலாம். உங்கள் துணைக்கு தெரியாமல் இரவு டின்னருக்கோ, சினிமாவுக்கோ புக் செய்துவிட்டு வந்து அழைத்து போகலாம். சர்ப்ரைசாக இருக்கும்.

எல்லாம் சரியா இருக்கணும்

தவறுக்கு மன்னிப்பு கேட்ட உடனே எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. கொஞ்சம் அமைதியாக இருங்கள் உடனே இருவரும் எங்காவது கிளம்பினால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தவறை உணர நேரம் கொடுங்கள். பிரச்சினையின் தன்மையை, தவறை இருவரும் யோசியுங்கள். பிறகு நடந்த தவறை மன்னித்து மறந்து விடுங்கள்.
Download As PDF

No comments: