Saturday, June 23, 2012


பசியை தூண்டும் புதினா

Medicinal Values Mint Aid0128



நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. காரச் சுவையும், மணமும் கொண்டது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது.

புதினாவில் உள்ள சத்துக்கள்:

புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு நார்ச்சத்தும் இதனுள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் புதினாவில் உள்ளன. இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.

வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்:

புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது

புதினா கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தினால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லடைப்பு போன்றவை நீங்கும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களுக்கு மலக்குடலில் உள்ள பூச்சிகள் சரியாகும்.

புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பற்பொடியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது. வாய் துர்நாற்றத்தை புதினா போக்குகிறது.

புதினா தேநீர்:

புதினாவை நிழலில் காயவைத்து, பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.

சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், எரிச்சல் கட்டுப்படும். பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி பிரச்சினைக்கு புதினாக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.

புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்

மாமிசங்களை பதப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.

No comments: