Thursday, June 14, 2012

ஆரோக்கியமாக உடல் மெலிய...

" ஐயோ என்னடி எனக்கு உடம்பு வைச்சுக்கிட்டே போகுது? நீ மட்டும் எப்பிடி அப்பிடியே இருக்கா?"

இப்படி பல பெண்கள் தலையை பிய்ச்சுக்கிறார்கள். அதுவும் இளைய பெண்கள் அல்ல, ஒரு 30-50 வரையுள்ள பெண்கள் தான் அதிகம். அவர்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம். வேலை செய்பவர்களில் இருந்து செய்யாதவர்கள் வரை எல்லோருமே இப்படித்தான் ஒரே புலம்பல். விசேஷங்களில் கண்டால் " என்ன எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டீங்களா? அதுசரி நாளும் பொழுதுமா எங்களுக்கு உடம்பு வைக்குது எப்பிடி கண்டு பிடிப்பீங்க" என்று மற்றவர்கள் சொல்லும் முதல் தங்களை தாங்களே சொல்லி சலித்துக்கொள்கிறார்கள் பல ஆன்டீக்கள். கேட்கவும், பார்க்கவும் கஷ்டமா இருக்கு.
ஆனால் எல்லோரும் அதற்காக செய்யும் மருத்துவம் தான் இன்னும் கஷ்டமா இருக்கு. மற்றவர்கள் சொல்லுகிறார்கள் என்று ஐஸ் கிறீம் சாப்பிடுறேல்லை,கொழுப்பு உணவுகள் இல்லை, காலை உணவு இல்லவே இல்லை. அதனால தேவை இல்லாத சோர்வு, மூளைக்கும் சரி உடம்புக்கும் சரி,மறதி எல்லாமே ஏற்படுகிறது. அத்தோடு தெயிலை என்று ஒன்று. அதை குடித்து உடம்பு மெலிவார்கள். சரி மெலிஞ்சுட்டுது என்று விட உடம்பு முன்னயை விட பல மடங்கு கூடும். நானும் கேட்டேன் பல பேரிடம் அது தெயிலை உண்மையாக உடல் பருமனுக்கா
என்று..ஓமோம் குடிச்சா உடம்பு நல்லா குறையும். எப்பிடி குறையுது எண்டால் கழிவுகளை வெளியேற்ற அந்த தெயிலை உதவுது எண்டுறாங்க. ஏன் அதுவே நிறைய பழம்,மரக்கறி,உடல் பயிற்சியால செய்தால் என்ன. எல்லாத்துக்குமே பஞ்சி படுறாங்க!

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியின் படி வெளிநாட்டு பெண்கள், அதாவது எம்மை போன்றவர்கள் சரியான காரணமின்றி உடல் பருமனை தங்கள் யோசனைக்கேற்ப சரியாக டயற் செய்யாமல் குறைப்பதால் பல வருத்தங்கள்,கஷ்டங்கள் உண்டாகுது என்கிறார்கள். இதுவே வெள்ளைக்காரி என்றால் சரியான டயற் புத்தகத்தோடு டயற் பண்ணி உடல் நலத்தையும் பேணி, உடலையும் மெலிய செய்கிறார். அதை ஏன் எங்க ஆண்டிக்கள் செய்யுறாங்க இல்லை?? உடல் பருமனுக்கு என்ன காரணம் என்று அறியாமலே தங்களுக்கு தங்களே மற்றவர்கள் சொல்லை கேட்டு என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள்.

உடல் பருமனுக்கு எவ்ளோ காரணம் இருக்கும். அதில் சில:
- வெளியே தெரியாத வருத்தமாக இருக்கலாம் (உ+ம்=> தைரோயிட்)
- நீர் உடம்பாக இருக்கலாம்
- நீங்கள் முதலே பாவிக்கும் ஏதும் மாத்திரையின் சைட் எ•பெக்ற்றா இருக்கலாம்.
- எல்லாவற்றையும் விட உடல் பயிற்சி இல்லாமல் இருக்கலாம்.
அதனாலே உடல் பருமனுக்கு சரியான காரணத்தை அறிந்து கொண்டு அதற்கான

வழிகளை பின்பற்றுவது நல்லது. காரணம் அறியாமல் நம்மை நாமே வருத்தி உடலை மெலிய பண்ணுவதில் எந்த பயனும் இல்லை. மாறாக இல்லாத வேறு வருத்தங்கள் வந்து விடும். அப்பிடியே உடல் மெலியணும்னா...நல்ல டயற் முறைகளை தெரிவு செய்து உடல் நலத்தை பேணும் வகையில் செய்யணும். உடல் பயிற்சியும் என்றைக்கும் நல்லதே!!

சமீபத்தில் உடற் பருமனை குறைக்க ஒரு வழி அறிந்தேன். பழங்களாலும்,மரக்கறிகளாலும் கூடவே உடற் பயிற்சியாலும் உடற் பருமனை குறைக்கும் வழி.
உங்கள் கவனத்திற்க்கு:

மரக்கறி சூப்

இந்த மரக்கறி சூப்பின் நோக்கம் ஆரோக்கியமான முறையில் உடற்பருமனை
குறைப்பதே.

7 நாட்கள் தொடர்ந்து செய்யலாம் இல்லை உங்கள் வசதிக்கேற்ப 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் என்று தொடர்ந்து செய்யலாம். ஆனால் அதற்கேற்ற அளவு மரக்கறிகளை எடுத்து சூப் செய்ய வேண்டும் பல நாட்கள் சூப்பை வைத்திருந்தால் பழுதாகி விடும்.

தேவையான பொருட்கள்:
( 7 நாட்களுக்குரிய மரக்கறிகள்)


குடை மிளகாய் 2
வெங்காயம் 6
தக்காளி(அரைத்த தக்காளி சாறு) 2 ரின்
கோவா 1/2
கரட் 5
லீற்ஸ் 1
உள்ளி 4

செய்முறை

1. மரக்கறிகளை சிறிது சிறிதாக வெட்டவும்
2. பின்னர் 3 லீற்றர் தண்ணிக்குள் விட்டு அவிக்கவும்.
3. அவித்த மரக்கறிகளை தண்ணீரோடு சேர்த்து மிக்சரில் போட்டு அரைக்கவும்.
4. நன்றாக அரைத்த பின் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கவும்.
சூப்பை குடிக்கும் போது சூடாக்கி சாப்பிடலாம்.

முதலாம் நாள்:

காலை, மாலை, மதியம்:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு ஏதுமொரு பழம்.
(வாழைப்பழத்தை தவிர)

இரண்டாம் நாள்:

காலை,மாலை,மதியம்:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு அவித்து தூள், உப்பு
போட்டு உங்கள் சுவைக்கேற்ப செய்யப்பட்ட மரக்கறிகள் ஏதும் உண்ணலாம்

மூன்றாம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு பழம், மரக்கறி

நான்காம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். ஒரு கிளாஸ் பால் அத்தோடு 3
வாழைப்பழம்

ஐந்தாம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு 150கிராம் இறைச்சி.
உங்கள் விருப்பம் போல செய்து சாப்பிடலாம்.
உ+ம்: உப்பு, தூள் போட்டு பொரித்து (தக்காளி சாற்றோடு தொட்டு) சாப்பிடலாம்.

ஆறாம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு 150கிராம் இறைச்சி
கூடவே ஏதும் மரக்கறி.

ஏழாம் நாள்:

காலை,மதியம்,மாலை:> ஒரு கிளாஸ் சூடாக்கிய சூப். அத்தோடு சோறு, கறி.


..............

இந்த டயட் முறையோடு உடற்பயிற்சியும் செய்யலாம். முடிந்தால் மட்டுமே!! ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும். களைப்பாக இருக்கும். அந் நேரத்தில் ஓரிரு நாட்கள் (விடுமுறையின் போது) செய்து பார்க்கலாம். பின்னர் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.






No comments: