Friday, June 15, 2012


 தமிழ் ”குடிமகன்” களுக்கு....


வணக்கம் தமிழ்நெஞ்சங்களே!எடக்குமடக்கில் உள்குத்து பதிவுகள் வெளிவந்திருப்பதால் இந்த தளம் வில்லங்கமானது என்று யாரும் நினைக்க வேண்டாம்.சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து வாசிக்கும் உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதே இந்த தளத்திற்கான நோக்கம்.இந்த பதிவில் தமிழ் குடிமகன்களைப் பற்றியும் மது அருந்துவதால் வரும் பின்விளைவுகளையும் மருத்துவ ரீதியாக அணுகப்போகிறோம்.


நமது நாட்டில் சிறு சந்தோஷம், பார்ட்டி, சோகம், கோபம் என எந்த காரணமாக இருந்தாலும் மதுவையே நாடி மது அடிமையாகி மரணம் அடைவோர் தினம் தினம் அதிகம். வம்புச்சண்டை, தெருச்சண்டை, வாயைக் கொடுத்து வம்பிழுத்தல், அது ஜாதிமத கலவரமாக மாறுதல், பாலியல் சீண்டல்கள், அத்து மீறல்கள், வன்முறை, கையில் குடிக்க காசில்லாமல், வீட்டில் திருட ஆரம்பித்து சிறுதிருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை வரை போகும் ஆபத்துக்கள், வன்முறை கட்டப்பஞ்சாயத்து, தாதாக்கள் தொடர்பு என ஆரம்பித்து என்கவுண்ட்டரில் முடியும் பரிதாபங்கள் இவற்றில் ஏதோ ஒன்று இந்த குடிமகன்கள் தினம் தினம் மது அருந்த சொல்லும் காரணம்.இதில் என்ன கொடுமை என்றால் பிறப்பிலும் குடி இறப்பிலும் குடி என இவர்கள் குடித்து குடித்து குடல் வெந்து போவதுதான் மிச்சம்.

இவர்களுக்கு நிலையான நண்பர்கள் இருக்கமாட்டார்கள். வீட்டில் மனைவி, குழந்தைகள் ஆகியோர் மீது அக்கறையிருக்காது, சந்தேகம், கருத்து வேறுபாடு, எடுத்ததற்கெல்லாம் வாக்குவாதம். சண்டை, பிடிவாதம், அடிதடி, குடும்பத்தை விட்டுப் பிரிதல், அடிக்கடி நோய் வாய்ப்படுதல், பணம் இல்லாத போது மனைவியை அடித்து அவர்களிடமிருந்து பணம் பறித்தல், விவாகரத்து, மருத்துவச் செலவு, மது செலவு, குடும்பத்தை கவனிக்க போதுமான பணமின்மை, உதவி செய்ய வருபவர்களையும் சந்தேகப்படுதல், திட்டுதல், அவர்களும் வரத் தயங்குதல் என வீட்டில் ஒருவர் மது அருந்து வதால் மொத்த குடும்பமும், உறவுகளும் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் இவர்கள் குடிப்பதால் அடிக்கடி உடல் நலமின்மை, விடுமுறை எடுத்தல், வேலையில் கவனமின்மை, வேலைத் திறன் குறைதல், அதனால் வேலையிலிருந்து நீக்கப்படுதல், வேறு வேலை கிடைக்கும் வரை வீட்டில், ரோட்டில் சண்டை, கடன் வாங்குதல், சரியாக திருப்பிச் செலுத்த இயலாததால் அடிதடி வம்பு, வழக்குகள், கட்டப் பஞ்சாயத்து, போலீஸ், நீதிமன்றம் என தொடர் பாதிப்புகள், கிடைத்த பணத்தில் குடித்து விட்டு வீடு, மனைவி, மக்களை கவனிக்காததால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள், வீட்டைச் சுற்றியும், தெருவிலும் மதிப்பை இழத்தல். குடிகாரன் என்ற அவப்பெயர் என தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.


குடிமகன்களுக்கு மருத்துவ ரீதியான பின்விளைவுகள் ;

சாதாரணமாக மது அருந்தாதவர்கள் நூற்றி ஐம்பது மி,லி மதுவை ஒரே சமயத்தில் அருந்தினால் இருபத்து நான்கு மணி நேரத்தில் உயிருக்கு ஆபத்து நிச்சயம்.

வயிற்றில் உணவு இல்லாத போது அருந்தினால் ஒரு மணி நேரத்திற்குள் இரத்தத்தில் மதுவின் அளவு உச்சத்தைத் தொடுகிறது.

மூன்று மணி நேரத்தில் முழுவதும் இரத்தத்தில் கலந்து விடுகிறது.

தண்ணீர் இல்லாமல் அப்படியே குடித்தாலோ குறைந்த அளவு தண்ணீர் கலந்து குடித்தாலோ வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண் உண்டாகும். சோடா போன்ற நுரை வரும் பானங்களும் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் இருந்து விரைவாக இரத்தத்தில் கலக்கிறது.

இரத்தத்தில் மது கலந்தவுடன் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள திரவங்களில் கலந்து மூளை தண்டுவட நீர், சிறுநீர் போன்றவற்றில் மதுவின் அளவு அதிகரிக்கிறது, மூளை அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது.

ஐம்பது மிலி மது அதிகமாக உள்ளே போனதும் சாதாரணமாக எளிதில் முடியாத காரியங்கள் எல்லாம் எளிதிலே முடித்துவிட முடியும் போன்ற போலி நம்பிக்கை ஏற்படுகிறது.

நூறு மிலி இரத்தத்தில் ஏறும் போது மனதில் உள்ள தயக்கம் அகன்று அடி மனதில் உள்ளதை வெளியே கொட்ட ஆரம்பிப்பான். சமாதானம் இருக்காது. பேச்சு அதிகம் ஆகும். சண்டை வரும். வம்பு சண்டைக்கு மற்றவரை இழுப்பதில் சந்தோஷம். கண்கள் சிவக்கும்,

கண்ணின் பார்வைத் திறன் குறையும். கண்மணி விரிவடையும். வெளிச்சம் பட்டாலும் சுருங்கும் தன்மை குறையும். கால்கள் நினைத்த இடத்திற்கு வர மறுக்கும். இதயத் துடிப்பு அதிகரிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். 

பொருட்கள் அனைத்தும் இரண்டு இரண்டாக தெரிய ஆரம்பிக்கும். கண்மணி சுருங்கி விடும். தள்ளாடுதல், பேச்சுக் குழறல், நடக்க இயலாமை, முகத்தில் எந்த பாவனையும் காட்ட முடியாததால் முகம் விகாரமாக மாறும்.

வாகனம் ஓட்டும் போது மிக விரைவாக முந்திச் செல்வதோ அல்லது ஜாக்கிரதையாக மெதுவாக செல்வதோ முடியாது. அடிக்கடி விபத்து ஏறபடும்.

பச்சைக்கும் சிவப்புக்கும் வித்தியாசம் காண இயலாத அளவிற்கு கண்பார்வை மங்கும். தன்னால் முடியும் என்ற தவறான எண்ணம் ஏற்படும். அதே சமயம் தன்னால் முடியாத அளவிற்கு ஓட்டும் திறன் குறையும்.

பார்வை மங்கி, தொடு உணர்ச்சி குறைந்து, முடிவெடுக்கும் திறன் முற்றிலும் குறையும்.

நீண்ட நாள் குடிகாரர்களுக்கு முந்நூறு மிலி க்கு மேல் மது அருந்தினால் ஆறு மணி நேரம் தூங்கி எழுந்தவுடன் தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மனநிலை பாதிப்பு, எதற்கு எடுத்தாலும் எரிந்து விழுதல், சரிவர உணவு உண்ணாமை, உடலில் நீர் இழப்பு ஏற்படும்.

வாந்தி ஏற்படுவதால் மூளைக்குச் செல்லும் மதுவின் அளவு குறைந்து பலர் உயிர் காப்பாற்றப் படுகிறார்கள். அரை மயக்கத்தில் வாந்தி எடுத்து அது மூச்சுக் குழலுக்குள் செல்வதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்கின்றனர்.

மேற்கூரிய அனைத்தையும் வாசித்துவிட்டு குடிமகன்கள் யாரேனும் ஒருவர் திருந்தினாலும் அது இந்த தளத்திற்கான பெரும் அங்கீகாரமாகவே கருதுகிறேன்

No comments: