Thursday, June 21, 2012


குழந்தைகளுக்கு வார்த்தைகள் புரியு

உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அப்படியானால் கவனமாகப் பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாதம் ஆகும் குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களுக்கான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே குழந்தைகளுக்கு இந்தப் புரிதல் வந்துவிடுகிறது.
குழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா என்று யோசிக்காமல் அவர்கள் முன் இயல்பாகப் பேசிவந்தால், பின்னாளில் அவர்களின் மொழித்திறன் சிறப்பாக அமையும் என்பது ஆய்வாளர்கள் கூறும் தகவல்.
பொதுவாக, குழந்தைகள் ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று கருதப்பட்டு வருகிறது. அப்போதும்கூட, குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான் புரிந்துகொள்கின்றனவே தவிர, அர்த்தங்களை அல்ல என்றும் எண்ணப்பட்டு வருகிறது.
ஆனால் புதிய ஆய்வுக்குத் தலைமை வகித்த மனோவியல் நிபுணர்கள் எலிகா பெர்கெல்சன் மற்றும் டேனியல் ஸ்விங்லி கூறுகையில், `குழந்தையைக் கவனித்துக்கொள் பவர், `ஆப்பிள் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது அதை நோக்கிக் குழந்தையின் பார்வை திரும்புகிறது’ என்கிறார்கள்.
இதுதொடர்பான ஆய்வுக்கு, 6 முதல் 9 மாத வயதுள்ள 33 குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முன்பு கணினித் திரையில் பல்வேறு பொருட்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கூறியதும் அதை நோக்கிக் குழந்தைகள் பார்வையைத் திருப்பின.
ஆறு முதல் ஒன்பது மாத வயதுக் குழந்தைகள், மற்ற படங்களை விட, சத்தமாகக் கூறப்பட்ட பொருட்களின் படங்களின் மீதே தங்கள் பார்வையை நிலைத்திருந்தன. இது, குறிப்பிட்ட வார்த்தைகள், குறிப்பிட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
“இந்த வயதுக் குழந்தைகளும் இதைப் போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. `மம்மி’, `டாடி’ போன்ற வார்த்தைகளைக் குழந்தைகள் சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல்வேறு வகையான வார்த்தைகளையும் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன என்று எங்கள் ஆய்வின் மூலம்தான் முதன்முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ஆய்வாளர் ஸ்விங்லி.

No comments: