காதலிக்க நேரமில்லாத தம்பதியரா? இதப் படிங்க vayal
ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.
காலை நேரத்தில் அவசரமாக கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவும்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது. நாளடைவில் விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.
குடும்பத்திற்கான நாள்
இப்பொழுதெல்லாம் 5 நாள் வேலை 2 நாள் விடுமுறை என்றாகிவிட்டது. எனவே விடுமுறை நாட்களை குடும்பத்திற்கென ரிசர்வ் செய்யுங்கள். அதில் எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம். துணையுடன் அமர்ந்து பேசவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜாலியாக வெளியில் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடலாம், திரைப்படத்திற்கு செல்லலாம். இது உங்களின் காதல் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.
நோ மிஸ்டு கால்
என்னதான் தலை போகிற வேலையாக இருந்தாலும் மனைவி அழைத்தால் அந்த போனை எடுத்து பேசுங்கள். அதை எடுக்காமல் மிஸ்டு காலாகும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையும் மிஸ் ஆகும் சூழல் உருவாகும். இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆயிரம் முறை ஐ லவ் யூ எஸ்எம் எஸ் அனுப்பலாம். மெயில், சாட்டிங், என ஏதாவது ஒரு விதத்தில் பணிச்சூழலுக்கு இடையே துணையுடன் உரையாடுங்கள். அது பணிச்சுமையை குறைக்க உதவும்.
இன்ப அதிர்ச்சி
வேலைக்காக உங்கள் துணைவி பேருந்தில் சென்று வருகிறார் என்றால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலுவலகத்தில் இருந்து அவரை அழைத்து வரலாம். அவ்வப்போது வரும் வழியில் உள்ள உணவகங்களிலேயே அமர்ந்து டிபன், ஐஸ்கிரீம் என சாப்பிடுவது இருவருக்குமே உற்சாகத்தை அதிகரிக்கும். அதேபோல் கணவருக்கு பிடித்தமான ஆடைகளை அயர்ன் செய்து வைப்பது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சின்ன உதவிகள்தான் உள்ளத்தில் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும்.
அன்பார்ந்த பரிசுப்பொருள்
தங்கம், வைரம் என விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி குவித்தால்தான் துணைவிக்கு பிடிக்கும் என்றில்லை. உங்களின் உணர்வுகளை, ரசனைகளை துணையுடன் பகிர்ந்து கொண்டாலே போதும் அதுவே அவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசுப்பொருள். உங்களுக்கு வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகள், பேஸ்புக், டுவிட்டரில் உங்களுக்கு கிடைத்த நல்ல படங்கள் என துணையின் மெயிலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இடையேயான காதல் பற்றிப் படரும்.
சின்ன சின்ன உதவிகள்
வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி. சமையலில் உதவி செய்யும் போது நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ்கள் அன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் அலுவலகப் பணியை உற்சாகத்துடன் செய்யலாம். பணிக்கு செல்லும் இளம் தம்பதியரே இதை பின்பற்றிப் பாருங்களேன். மன அழுத்தம் எதுவும் இன்றி வாழ்க்கையை உற்சாகமுடன் தொடரலாம்.
No comments:
Post a Comment